பயணங்கள் முடிவதில்லை – சீரடி

நீண்ட நாள் வீட்டுக்குள் இருந்த தனிமை, ஒரு யாத்திரை செல்ல மனம் விரும்பியது. நண்பர்களிடம் பேசும்போது மூன்று இடங்கள் மனதில் இருந்தது – வாரணாசி, தாஜ்மஹால், அரித்துவார்.  தாஜ்மஹால் இறுதி செய்யப்பட்டு ரயில் பயணம் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது.  முன்பதிவு செய்யும்முன் இரண்டு நண்பர்கள் போதிய நாட்கள் விடுப்பு இல்லாமல் பயணத்தில் இருந்து விலகிக்கொள்ள, நான் மட்டும் செல்வதென முடிவெடுத்தேன்.  பாபுவின் அறிவுறுத்தலால் பயணப்படும் இடமும் மாற்றப்பட்டு,  ஷிரிடி செல்ல தயாரானேன்.

ரயில் பயணத்திற்காக உடனடி(takkal) முன்பதிவு செய்தேன்,  ஷிரிடி சாய்நகர் எக்ஸ்பிரஸ் 2nd AC பெட்டியில் இருக்கை 24 ஒதுக்கப்பட்டது.  நான் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணிப்பது இதுவே முதல்முறை.  புதன்கிழமை காலை IRCTC -லிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக ஷிரிடி புறப்படும் என்று தகவல்.  கையடக்க Traveling water heater cum flask எனது பயண பொருட்களில் முக்கியமானது. சரியாக 9.50AM மணியளவில் சென்ட்ரல் ரயில்நிலையத்தை அடைந்தேன்.  ரயில் எண்  22601 நடைமேடை 9-லிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிப்பு வந்துகொண்டிருந்தது.  A2B-ல்  பில்டர் காபி குடித்துவிட்டு A2 பெட்டியை நோக்கி நடந்தேன்.  ஒருவித எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைத்தேன், நான் எதிர்பார்த்ததை விட இரண்டாம் வகுப்புப்  பெட்டி சுத்தமாகவும், ஒருவித நறுமணத்துடனும் இருந்தது.  சாதாரண வகுப்பில் 6 இருக்கைகள் இருக்கும் இடத்தில இங்கு 4  மட்டுமே இருந்தன.  4 இருக்கைகளுக்கும் சேர்த்து ஒரே திரைச்சீலை.  பக்கவாட்டில் வழக்கமான இரண்டு இருக்கைகள்தான்.  பக்கவாட்டில் இருக்கும் கீழ் மற்றும் மேல் இருக்கைகளுக்கு தனித்தனி திரைச்சீலைகள்.  எனக்கு பக்கவாட்டு மேல் இருக்கை ஒதுக்கப்படிருந்தது.  பொருட்களை மேல் இருக்கையில் வைத்துவிட்டு இரண்டாக பிரிந்திருந்த கீழ் இருக்கையில் எண் 24-ல் அமர்ந்து எனக்கு எதிரே யார் என்று ஆவலுடன் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எனக்கு எதிரே 23-ம் இருக்கையில் வந்து அமர்ந்தார்.  24-அ என்று என்னைக் கேட்டார், தலையை மட்டும் ஆம் என்று அசைத்தேன் மெலிதான புன்னகையுடன். அவருடைய Luggage பெரியதாக இருந்ததைப் பார்த்து இவர்தான் என்னுடைய 27-மணி நேர பயணநண்பர் கடைசி நிறுத்தம்வரை ஒன்றாக பயணிக்கப் போகிறோம் என்று முதலில் நினைத்தேன்,  ஆனால் பின்னர் தான் இவர் பெங்களூர் KR Puram நிறுத்தத்தில் இறங்கிவிடுவார் என்று தெரிய வந்தது.  எங்களுக்கு நேராக இருந்த  4 இருக்கைகள் பகுதிக்கு எனக்கு முன்பாகவே 2 நடுத்தர வயது குடும்ப பெண்மணிகள் பூக்களை சரமாக கட்டிக்கொண்டு அது அவர்களது 2 நாள் வீடு என்பது போல இருந்தனர்.  மீதமுள்ள இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தன.  ஒருவழியாக ரயில் 11.50-க்கு புறப்பட ஆயத்தமானது அதற்கே உரிய சத்தத்துடன், மீதமுள்ள 2 இருக்கைகளுக்கும் தமிழ் தெரியாத தெலுங்கு மொழி பேசும் கணவன், மனைவி மற்றும் ஒரு 6 வயது குழந்தை என குடும்பமாக வந்து சேர்ந்தார்கள். 

ரயில் மெதுவாக சென்ட்ரல் நிலையத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இலக்கை நோக்கி வேகமெடுத்தது.  சில நிமிடங்களில் பயணச்சீட்டு பரிசோதகர் A2 பயணிகளை பரிசோதித்துவிட்டு அடுத்தடுத்த பெட்டிகளுக்குச் சென்றார்.  ரயிலுக்கே உரிய தாரக மந்திரமான “Tea” “Coffee” “Water” “Veg biriyani” போன்ற வார்த்தைகள் காற்றில் ஒலித்து கொண்டிருந்தன.  நானாக முன்வந்து எனக்கு எதிரே அமர்ந்திருந்த பயணியிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.  அவரும் வெங்கட் என தன்னை  அறிமுகம் செய்துகொண்டார்.  ஏதாவது கதைப்பர் என்று   எதிர்பார்த்தேன், கைபேசியோடு ஒன்றிவிட்டார்.  இப்பயணம் முழுவதும் கைபேசியை குறைந்த கணமே பயன்படுத்த வேண்டுமென்று முன்னரே முடிவெடுத்திருந்த நான் ஜன்னல் வழி வேடிக்கையை தொடர்ந்தேன்.  பக்கத்தில் அந்த இரண்டு நடுத்தர வயது பெண்மணிகள் 6-வயது குழந்தையிடம் தெலுங்கில் சரளமாக பேசினார்கள்,  “மீ பேரு ஏன்டீ?”.  மழலை மாறாத குழந்தை “நா பேரு லித்திகா” என்று இரண்டு மூன்று முறை அவர்களுக்கு பதில் சொன்னது. நிறைய கேள்விகளும் ஒருசில பதில்களும் பரிமாறியபின்,  கேள்வி கேட்பது குழந்தைக்கு பிடிக்கவில்லை போலும்,  கையில் சோளப்பொரி(popcorn)-யுடன்  பெட்டியின் ஒரு முனையிலிருந்து  மறுமுனை வரை ஒரு விசிட் அடித்துவிட்டு,  குழந்தை அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தது.  அதற்குள் நடுத்தர பெண்மணிகள் குழந்தையின் பெற்றோரிடமும் சகஜமாக ஒன்றிவிட்டனர்.  நான் மீண்டும் ஜன்னலின் வழியே தொடர, வெங்கட் கைபேசியுடன் சண்டை போட்டு கொண்டு இருந்தார். 

AC வகுப்பில் பெட்ஷீட், கம்பளி, தலையணை ஆகியவை கிடைக்கும் என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் முகம் துடைக்கும் துண்டும் (கேட்டால் மட்டுமே) கிடைக்கும் என்று ஒருசிலருக்குத் தான் தெரியும்.  முகத்தைக் கழுவிக்கொண்டு  Housekeeping (Bedroll staff) நபரிடம் துண்டை(dry cleaned) வாங்கிக்கொண்டு இருக்கைக்கு சென்றேன்.  இரண்டு செவ்வாழைப் பழங்கள் எடுத்து எனது சக பயணியான வெங்கட் அவர்களுக்கு ஒன்றை நீட்டினேன், “இட்ஸ் ஒகே தேங்க்ஸ்” என்றார். “ஆப்பிள்” என்றேன் கையால் வேண்டாம் என்ற சைகை மட்டுமே காட்டினார்.  சாப்பாடு எப்போதுவரும் என்று கேட்டார்.  ரயிலில் வரும் எந்த உணவு விற்பனையாளரிடமும் நீங்கள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றேன்.  “மீல்ஸ் ஸ் நாட் இன்கிளுடெட் இன் தி டிக்கெட்?”.  நான் இல்லை என்றேன்.  அவருடைய அசௌகரியம் அவரின் முகத்தில் தெரிந்தது.  சிறிது யோசனைக்குப்  பிறகு ஒரு லெமன் ரைஸ் வாங்கிக்கொண்டார்.  நான் இரண்டு செவ்வாழை மற்றும் ஒரு ஆப்பிளுடன் மதிய உணவை முடித்தேன். 

காட்பாடி வரை பெட்டி வெளிச்சமாக இருந்தது.  மதியஉணவை முடித்து ஒருவர் பின் ஒருவராக அவர்களின் திரைச்சீலையை மூடிக்கொண்டனர்.  பகலிலேயே பெட்டி இருள்மயமானது எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது.  பெட்டியின் வெளியே சென்று “Bedroll roll” staff இருக்கையில் அமர்ந்தேன்,  AC பெட்டியில் இருக்கும் குளிருக்கு இந்த இருக்கையில் படும் வெயில் கொஞ்சம் இதமாக இருந்தது. என்னருகே ஒருவர் வந்து உட்கார்ந்தார் அவர்தான் அந்த இருக்கையின் சொந்தக்காரர்.  சட்டென இருக்கையிலிருந்து எழுவதற்கு முற்பட்டேன் பரவாயில்லை சார் உக்காருங்க என்றார்.  சிரிடி-யா என்றார் ஆம் என்றேன்.  பெயர் சண்முகம் வயது 52 கடந்த ஒன்றரை வருடமாக இந்த பணியில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.  வேலையெல்லாம் முடித்துவிட்டு அப்போதுதான் சாப்பிட துவங்கினார்.  “சாப்டுங்க சார்”, “சாப்பிட்டேன்ணே, நீங்க சாப்பிடுங்க” என்றேன்.  அவர் என்னை சார் சார் என்று அழைப்பது எனக்கு அசௌகரியமாகப் பட்டது.  நான்கு மணிநேரம் வெங்கட் பேசிய இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு ஒரு மணிநேரம் சண்முகதுடன் பேசியதும் அவரைப் பற்றியும் அவர் செய்யும் வேலையை பற்றியும் தெரிந்து கொண்டது சற்று ஆறுதலாய் உணரச் செய்தது.  ரயில் KR Puram-யை நெருங்கியது பின்னர் சந்திக்கலாம் என்றும் சொல்லி உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தேன்.  வெங்கட் பொருட்களை சரிபார்த்து இறங்க தயாராக இருந்தார்.  5:20 PM மணியளவில்  KR Puram-ல் ரயில் நின்றது.  வெங்கட் தலையசைத்து சைகை மூலமாகவே விடைபெற்றார்.  வெங்கட் இருக்கைக்கு ஆள் வருவதற்கு முன் ஒரு படுக்கை இருக்கையை பிரித்து இரண்டாக்கி 24-ல் அமர்ந்தேன்.  ரயில் புறப்பட்டது.  வெங்கட் இருக்கைக்கு ஒரு பெண் வந்தடைந்தர்.  “23-ஹமாரா ஹே” என்றார்.  “24 ஸ் மைன்” என்றேன்.  “உபர் ஹே?”, ஆம் என்று தலையசைத்தேன்.  “ஐ வான்ன ஸ்லீப், கேன் யு கோ அப்” என்றார்.  வேண்டாவெறுப்புடன் பொருட்களை மேல் இருக்கையில் வைத்துவிட்டு படுக்கை விரிப்புகளை சரிசெய்து மேலே சென்றேன் இப்போது எனது திரைச்சீலையும் மூடப்பட்டது.  இரவு 7.30PM ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுவிட்டு ரயிலின் விட்டத்தை பார்த்துக்கொண்டே உறங்கிவிட்டேன்.

கண்விழித்தபோது காலை 5.30.  வழக்கமாக என் குலதெய்வத்தையும்,  என் மகன் புகைப்படத்தையும் பார்த்த பின்னரே எனது நாள் தொடங்கும்.  இந்த பழக்கம் என் மகன் என்னைவிட்டு பிரிந்து மனைவியுடன் சென்ற 4 ஆண்டுகளாக தொடர்கிறது. இருக்கையிலிருந்து இறங்கி வந்து வாஷ்பேசின் மற்றும் கழிப்பறையை  ஒரு நோட்டம் விட்டுவிட்டு பற்குச்சியையும், பற்பசையையும் எடுத்துக்கொண்டு காலையில் செய்ய வேண்டிய சமயக் கடமைகளை தொடங்கினேன்.  ரயில் கதவை தாள் நீக்கி பார்த்தபொழுது ரயில் மகாராஷ்டிரா சோலாப்பூர்-யை கடந்து Daund JN-யை நோக்கி சென்றுகொண்டிருந்தது.  சண்முகம் அண்ணா(housekeeping worker)  என்னக்கு முன்னரே அவர் வேலைகளை செய்ய சென்றுவிட்டார். வாஷ்பேசின் அருகாமையில் உள்ள அவரது இருக்கை  மடிக்காமலே இருந்தது.  ஒரு வேளை அவர் நான் வருவேன் என்று நினைத்திருக்கலாம்.  கடமைகளை செய்து முடித்து அவரின் இருக்கையில் அமர்ந்தேன்.  சிறிது நேரத்தில் சண்முகம் அண்ணா வந்து உட்கார்ந்தார்.  “வாங்கண்ணா”, “என்ன சார், நல்ல தூக்கமா?”  “ஆமாம்”.

வெளியே பார்த்தவாறு “நல்ல கரிசல் மண் பண்ணையதுக்கு நல்லது” என்றார்.  ஆம் என்றேன்.  அதனால் தான் இங்கே உளுந்தும் கரும்பும் அதிகம் என்றார்.  நான் உளுந்து பயிரை முதன்முறையாக பார்க்கிறேன்.  சிறிது நேர வெளிப்பார்வைக்கு பிறகு இங்கு நிறைய கிணறுகள் இல்லை என்றும்,  ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலிருந்து நேரடியாக  மோட்டார் வைத்து நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர் என்றும் புரிந்தது.  பெரும்பாலும் பச்சை பசேலென்று நிலங்கள் காட்சியளிக்கின்றன.  தரிசு நிலங்களை மிகவும் அரிதாகவே பார்க்க முடிந்தது.  வீடுகளும் நெருக்கமாக இல்லை.  வீடிற்கு 5 முதல் 10 எருமை மாடுகள் இருக்கின்றன.  சில வருடங்களுக்கு முன் நடிகைகள் வித்யா பாலன் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் திறந்தவெளி மலம் கழித்தல் தொடர்பான இந்திய அரசின் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்திருந்தனர். திரையரங்கங்களில் இதை பரவலாக திரையிடப்பட்டபோது, நான் இதை ஒரு அசூசையாக நெருடலாக உணர்ந்ததுண்டு. இப்போது ஒரு சில காட்சிகளை கண்டபின் இந்த விளம்பரத்தின் தேவை எனக்கு புரிந்தது.  இன்னும் திறந்தவெளி மலம் கழித்தல் வடநாட்டில் இருக்கிறது.  ரயில் நிறுத்தும்போதும் எழுப்பும் அலறல் சத்தம் என் யோசனைகளில் இருந்து என்னை விடுவித்து நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது.  ரயில் Daund JN-ல்  நின்றது.  மணியை பார்த்தேன் 6.30AM.

“சண்முகம் அண்ணா, Tea சாப்பிடுறீங்களா?”,  “இங்க வேணாம் சார்,  Ahmednagar ஸ்டேஷன் வரட்டும், அங்க நல்ல Tea கிடைக்கும்”.  இப்போது Tea, water, coffee என்ற மந்திரம், மொழிமாறி garam Chai, bru coffee, paanee, vada pav நல்லாயிருக்கே, pav bhaji, veg pulao என்று காற்றில் அலைந்து கொண்டிருந்தது.   உண்மை என்னவென்றால் இவற்றில் ஒன்றைகூட வாயில் வைக்கமுடியாது, Vada Pav தவிர.  (கவனத்திற்கு; வாயில் பாக்கு போட்டுக்கொண்டிருக்கும் விற்பனையாளர்களிடம்  பொருள் வாங்குவதை தவிக்கவும்).  20 நிமிட நிறுத்தத்திற்கு பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டது.  அதே வேடிக்கை, ஒருசில உரையாடல்கள் அதே Open Defecation காட்சிகள், ரயில்  Ahmednagar ஸ்டேஷன்க்கு 7.45AM வந்தடைந்தது.  சண்முகம் அண்ணா சொன்னது போலவே ஒருவர் “Chai sir, Ahmednagar garam spl chai” என்று சொல்லிக்கொண்டு வந்தார்.  “தோ Chai பையா” என்றேன்.  ஒன்றை வாங்கி சண்முகம் அண்ணாவிடம் கொடுத்தேன் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிக்கொண்டார்.  அவர் சொன்னது போலவே Tea எல்லா வகையான spices-ம் சேர்க்கப்பட்டு நன்றாகவே இருந்தது.

Tea குடித்துக்கொண்டே,  

“அண்ணா,  நீங்க எங்கெங்கெல்லாம் போயிருக்கீங்க”. 

“நான் North full-ah சுத்திட்டேன், எந்த செலவும் இல்லாமலே”.

“Katra(Shri Mata Vaishno Devi Temple) 4-தடவ போயிருக்கேன், Amritsar (பொற்கோவில்), Jaipur, Assam, Bombay, Kerala, Guwahati, Delhi-ஒரு 10 தடவ போயிருக்கேன்”.

“ஹிந்தி தெரியுமாண்ணா?”.

“ அவசியம் இல்லை”.

மனதில் ஒரு ஏமாற்றம்.  எத்தனையோ நாட்கள் உள்நாட்டு பயணம் போக முடிவு செய்து மொழி, திருட்டு பயம் மற்றும் இனம் புரியாத பலப்பல தயக்கங்கள் அல்லது பயம் காரணமாக பயணங்களை ரத்து செய்துள்ளேன்.  இவர் பெரிதாக படிக்கவில்லை, மொழி தெரியாது, பெரும்பாலான இடங்களுக்கு சென்றுவந்துள்ளார் –  பாராட்டுக்குரியது.   

சாப்பாடெல்லாம் எப்படி அண்ணா என்றதற்கு,  

“மேல போக போக Rotti(சப்பாத்தி) Dal-தான் சார்.  rice-முக்கா வேக்காடுதான் கிடைக்கும் நம்ம ஊரு மாதிரி நல்ல வெந்த சோறு கிடைக்காது சார். வயிறு உப்புசமாத்தான் இருக்கும்,  என்ன பண்றது சார் நாலு காசு சம்பாதிக்கணும்-ல” என்றார். 

மணி 11  ஆகிவிட்டது நான் சென்னை திரும்புவதற்கு இன்னும் முன்பதிவு செய்யவில்லை (இந்த ரயில் மறுபடியும் இங்கிருந்து நாளை காலை 8.30AM மணியளவில் சென்னை புறப்படும்) உடனடி(takkal) முன்பதிவு செய்துமுடித்தேன்.  இம்முறை Sleeper Class-ல் (S3-56 மேல் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது) இரண்டாம் வகுப்பு AC எப்போதும் இருள்மயமாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. அவரிடம் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. 12:45 AM-க்கு ரயில் சிரடி சாய்நகர் வந்தடைந்தது.

இருக்கைக்குச் சென்று எனது பொருட்களை எடுத்துக்கொண்டு இறங்க தயாராகும் போது தான் எனது பக்கவாட்டில் அமர்த்திருந்த பயணிகளின் திரைச்சீலை நீங்கி சென்னை-ல் பார்த்த தெலுங்கு குடும்பமும், அந்த இரண்டு பெண்மணிகளும்  தென்பட்டனர் – இரண்டு நாட்களுக்கு பிறகு.   “இவங்களுக்கு ஒரு யாத்திரை போறதுனா என்னனு தெரியல” – மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.  ரயிலில் இருந்து இறங்கி சிரிடி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினேன். 

சிரிடி ரயில்நிலையத்தின் முகப்பு மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்கள் சுத்தமாகவே இருந்தன.  பூக்களை மொய்க்கும் வண்டுகள் போல ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளை அணுகி மந்திர் மந்திர் என்று சொல்லிக்கொண்டு கிடைத்தவர்களை ஏற்றிக்கொண்டு சாய் மந்திர் நோக்கி புறப்படுகிறார்கள்.  ஒரு நபருக்கு 100 ரூபாய் வீதம் ஒரு ஆட்டோவில் 4 நபர்கள் ரயில் நிலயத்திலிருந்து மந்திர் இருக்கும் தூரம் 1.5 KM-கும் குறைவுதான்.  இருந்தாலும் இதுதான் இங்கு குறைந்தபட்ச rate.  நான் கோவிலிக்கு அருகிலேயே நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் (Hotel Sai Neem Tree) முன்பதிவு செய்திருதேன்.  ஆட்டோ ஓட்டுனரிடம் இந்த ஹோட்டலில் இறக்கி விடுமாறு கூறினேன்.  ஓட்டுனருக்கு இந்த ஹோட்டல் பரிச்சயமானதாக இருக்க வேண்டும்,  சரியாக ஹோட்டலில் இறக்கிவிட்டார்.  உள்ளே நுழைந்து வரவேற்பாளரை அணுகினேன்.

“சாய் ராம், நமஸ்தே சார், ஹொவ் கேன் ஹை ஹெல்ப் யு?”.

“ ஐ ஹாவ் புக்கிங்”.

“ஆப்கா நாம்?” பெயரை கூறியவுடன் கணினியில் சரிபார்த்துவிட்டு ஒரு Access Card-யை எடுத்துக்கொண்டு, “லெட்ஸ் கோ sir” என்றார் ரெசெப்சென் பெண்.  மூன்றாம் தளம் சென்று அறை எண் 307-யை திறந்து “இட்ஸ் யுவர்ஸ் sir” என்று சொல்லி கையை நீட்டி உள்நுழைய பணிவாக பின்தடர்ந்து Insert Card for power-என்று அச்சிடப்பட்டு சுவற்றில் ஒட்டிய Power Saver Device-ல் Access card நுழைத்து AC-யை ஆன் செய்துவிட்டு, “யூஸ் போன் இப் எனிதிங் யு நீடு, ஆர் ஆஃப்ரோச் ரெசெப்சென் எனிடைம்”.  “சூர், தேங்க்கியூ” என்றேன். தலைசாய்த்து பணிவாக அறையிலிருந்து விடைபெற்றாள்.

மாலை 3.30 மணிக்கு தரிசனம் முன்பதிவு செய்திருந்தேன். குளித்துமுடித்து தரிசனத்துக்கு செல்ல ஆயத்தமானேன்.  நன்றாக பசி எடுத்து, ஹோட்டலில் உள்ள உணவத்திற்கு சென்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து Mushroom fried rice order-செய்தேன்.  உணவு வருவதற்கு முன்பாக இரண்டு சுட்ட அப்பளம், புதினா துவையலை வைத்தார்கள். உணவை எதிர்பார்த்து ஒரு அப்பளத்தையும், துவயலையும் காலிசெய்தேன்.  சிறிது இடைவெளிக்கு பிறகு உணவு வந்தது, ஏமாற்றமே மிஞ்சியது,  அதே முக்கால் வேக்காடு சோற்றில் மிக பொடியாக நறுக்கிய காளான் தூவப்பட்டிருந்தது.  அளவு மிகவும் குறைவு (இரண்டு இட்லி அடங்கும் bowl அளவு). பாதி சாப்பிட்டபின்  மெல்லமுடியவில்லை.  பஸ் பையா, பில் ப்ளீஸ் என்றேன், எழுந்து நின்று   ஹாண்ட்வாஷ் என்றேன்,  வி வில் கெட் யு பிங்கர்பௌல் என்றார் சப்ளையர்.  பில் வந்தது, சற்று அதிர்ச்சி.  Rs. 470 என்று அசிடிப்பட்டிருந்த்தது.  அரைகுறை மனசுடன் பில்-யை செலுத்திவிட்டு, கோவிலை நோக்கி நடந்தேன்.  வழிநிறைய தேநீர் கடைகள்.  இஞ்சி-Tea கிடைக்கும் என்பதை குறிப்பதற்கு கடை முன் இஞ்சி மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது.  கோவிலை அடைந்து mobile-யை off – செய்து லாக்கரில் வைத்தேன்.  கட்டணம் Rs.10.  பக்கத்தில் சப்பாத்து (காலணி) லாக்கரில் சப்பாத்து-யை வைத்தேன் இதற்கு கட்டணம் கிடையாது.

Paid Darshan Gate-06 என்று போர்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இல்லை.  தரிசன டிக்கெட்டை பரிசோதித்து இரும்பு Gate வழியே அனுமதித்தனர்.  இரண்டு வழிகள் இரும்பு கம்பிகளை வைத்து பிரிக்கப்பட்டு இருந்தது.  ஒரு வழியில் paid தர்சன், இன்னொரு வழியில் free தர்சன் இது gate 07-ல் இருந்து வருவது போன்று வடிவமைக்க பட்டுள்ளது.  இரண்டு சோதனைகளுக்கு பிறகு நேராக சன்னதிக்குள் நுழைந்தேன்.  சாய் பாபா ஜீவ சமாதி காவி போர்வை போர்த்தப்பட்டு ஆள் உயர பாபா சிலைக்கு அடியில் அமைந்திருந்த்தது.  பாபா சிலைக்கு பச்சை நிற பட்டு தலைப்பாகை அணிவிக்கப்பட்டு பச்சை நிற ஆடை உடுத்தியிருந்தித்தனர்.  மதியான ஆரத்தி உடையில் பாபா காட்சியளித்தார்.  சமாதிக்கு இருபுறமும் காவியுடை போர்த்திய சாமியார்கள் அமர்ந்திருந்தார்கள்.  தரிசனம் முடித்து வெளியே வந்ததும் ஒரு அணையா தீபம் இருக்கும் இதற்கு NANDA DEEP-THE LAMP OF BLISS என்று பெயர்.  இன்னொரு பெயர் Sai Aura.  இது ஒரு வேப்பமரத்தின் அருகே இருக்கிறது.  இந்த மரத்தை சுற்றி ஒரு கனமான கம்பி வேலி போடப்பட்டுள்ளது.  இதன் இலைகள் உதிர்ந்தாலும் கம்பிவேலியை விட்டு வெளியே போகாதவண்ணம் ஒரு ஆள் அதை  துடைப்பம் கொண்டு உள்ளிழுத்துக் கொண்டே இருகிறார்.  கிடைக்கும் ஒன்றிரண்டு இலைகளை பக்தர்கள் ஓடி ஓடி எடுத்து அவர்கள் அதிர்ஷ்டசாலி என நினைத்து பத்திரப்படுத்துகிறார்கள்.  தொடர்ந்து, வெளியேறும் வழியில் 3 வரிசைகள் அமைத்து  சாம்பல் கலந்த திருநீறு மற்றும்  பூந்தி பிரசாதமாக கொடுக்கப்பட்டது.  கோவிலை விட்டு வெளியே செல்லும் வழியில் காசு கொடுத்து லட்டு வாங்கிகொள்ளலாம்.  ஒரு லட்டு Rs.10 மூன்று லட்டு பொட்டலம் Rs.25. மணி 5:30PM, தரிசனம் இனிதே முடிந்தது.

கோவிலைப் பற்றி சொல்லவேண்டுமானால் கோவில் கருங்கற்களால் கட்டுப்பட்டுள்ளது.  நடுவே தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரம் உச்சியில் காவிக்கொடி இருந்தது.  திருப்பதி கோவிலின் கட்டமைப்பு,  தரிசனம் செய்யும் முறை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, அதில் ஒரு  25% இங்கு நடைமுறைப்படுத்தி இருந்தனர்.  இதை கோவில் என்று சொல்ல முடியாது இது சாய் பாபா ஜீவ சமாதி அடைந்த இடம்.  Shree Samadhi Mandir என்றே எழுதி இருக்கிறது.  Sai Baba இவருடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.  இங்கு அப்துல் பாபா மற்றும் கனி பாபா இருவரின் ஜீவ சமாதி இருக்கின்றது. சாய் பாபா உபயோகபடுத்திய பொருட்கள் இங்கு அருங்காட்சியகமாக வைக்கப்பட்டுள்ளது.  கோவிலை சுற்றி கைவினை பொருட்களின் கடைகள், சாய் பாபா சிலைகள் விற்பனை, உலர் திராட்சை கடைகள், உணவகங்கள், இதர பொருட்கள் விற்கும் கடைகளும் அமைந்துள்ளன. அருகே சுமார்  500 மீட்டர் தொலைவில் Sai Teerth Devotional Theme Park உள்ளது, நுழைவு சீட்டு Rs.550.  கோவிலை விட்டு வெளியே வந்ததும் Maxi Cab ஓட்டுனர்கள் Shani Shingnapur செல்ல பக்தர்களை அனுகுவார்கள், போக வர 4 மணி நேரம் ஆகும்,  ஒருவருக்கு Rs-200(sharing basis).  இது ஒரு புண்ணியஸ்தலம், சனி பகவான் முதன் முதலில் கால் வைத்த இடம் என்று நம்பப்படுகிறது.  இந்த ஊரில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதிய நேரமின்மை காரணமாக நான் Shani Shingnapur போகவில்லை.  கோவிலை சுற்றியுள்ள கடைகளில் சில பொருட்களை வாங்கினேன், முக்கியமாக Sai Baba சிலைகள்.  இந்த சிலைகளை வாங்கும்போது சற்று கவனம் தேவை நிறைய ஏமாற்றுவேலை நடக்கும்.  Fully marble, Fully stone என்று சொல்லி மாவினால் செய்ததை கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்.  நேரம் மாலை 6:30 அலைச்சலுக்கு இதமாக ஒரு பில்டர் காபி குடிக்க நினைத்தேன்.  உடுப்பி ஹோட்டலை கண்டுபிடித்து ஒரு பில்டர் காபி ஆர்டர் செய்தேன்.  தமிழ் ஆள்தான் ஆர்டர் எடுத்தார்.  அவர் என்னுடைய தோற்றத்தை வைத்து நான் தமிழ் என்று கண்டுபிடித்து இருக்கக்கூடும்.  15 நிமிடத்தில் காபி வந்தது மெதுவடை வேணுமா சார் என்றார், வேண்டாம் என்றேன்.  நினைத்தது போலே என்னை தமிழ் என்று கண்டுபிடித்துவிட்டார்.  காபியை குடித்துவிட்டு கோவிலுக்குச் செல்லும் பக்தர்களை வேடிக்கை பார்த்தேன்.  உணவகம் கோவிலின் எதிரே அமைந்திருந்தது.  மக்கள் அனைவரும் காவி உடை போர்த்தி sai baba ki என்று ஒரு குழு சொல்ல “ஜெய்” என்று இன்னொரு குழு முழங்க மாலை நேரத்து தரிசினத்திற்கு சென்றுகொண்டிருந்த காட்சி மிகவும் ரம்மியமாக இருந்தது.  சீரடியைச் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. 

உணவகத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் பில்டர் காபி கொடுத்தவரிடம் முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்கள் என்று கேட்டு, கீழ்கண்ட இடங்களை தெரிந்து கொண்டேன்.

➢ 1794-ல் கட்டப்பட்ட “Kalaram Temple”.

➢ 2000 வருட பழமை வாய்ந்த “Pandavleni Caves” சமண அரசர்களல் கட்டப்பட்டது. 

➢ 14 வருட வனவாசத்தில் ஸ்ரீ ராமர் தங்கி நீராடிய இடம் “Ramkund”. 

➢ கிமு 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட “Ellora Caves”  இது உலகின் மிகப்பெரிய பாறையில் வெட்டப்பட்ட இந்து கோவில் குகை வகைகளில் ஒன்று. 

➢ கடைசியாக Nashik-ல் அமைந்துள்ள “Trimbakeshwar temple”.

வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.  மேகம் இருண்டு, திரண்டு கீழே மழையாக இறங்க காத்துக்கொண்டு இருந்தது.  நேராக தாங்கும் விடுதிக்கு சென்று சிறிது நேரம் உறங்கி ஓய்வெடுத்தேன்.  கண்விழித்து பார்த்தபோது நேரம் இரவு 9:15, எழுந்து அவசரமாக முகத்தை கழுவினேன்.  தங்குவிடுதிக்கு பக்கத்தில் ஒரு ஆந்திர சுத்த சைவ உணவகம் (Kamal pure veg) உள்ளது அதில் இட்லி சாப்பிடலாம் என நினைத்தேன்.  ஆனால் நேரம் ஆகிவிட்டதால் இட்லி கிடைக்குமா என்று தெரியவில்லை.  நேராக உணவகத்தை அடைந்து இட்லி இருக்கா என்றேன் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த நபர் என்னை நிமிந்து பார்த்து இருக்கு என்றார். நாற்காலியில் அமர்ந்து 4 இட்லியை ஆர்டர் செய்தேன்.  உணவு சூடாக இருந்தது.  சாம்பார் காரம் அதிகம், ஆந்திர ஸ்டைல்.  நான் தேங்காய் சட்னியை தொட்டுக்கொண்டேன்.  மேலும் ஒரு இட்லியையும் சேர்த்து சாப்பிட்டு  முடித்து பணம் செலுத்திவிட்டு கொஞ்சதூரம் நடந்தேன். பெரிதாக கூட்டம் இல்லாத தனியாக இருக்கும் ஒரு Tea கடையில் அமர்ந்து  ஏக் chai dedo bhaiya என்றேன்.  பிரதான சாலையை ஒட்டி கடை அமைந்துள்ளது.  வெளிச்சம் அதிகமாக இல்லாத சாலை, சாலைக்கு நடுவே ஒன்று இரண்டு சோடியம்-நீராவி விளக்கு இரவு 10 மணி என்பதால் போக்குவரத்து பெரிதாகஇல்லை.  ஒன்று இரண்டு ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் Tea குடிக்க வந்தார்கள்.  டீயில் ஒருவகை புல்லை போட்டு கொதிக்கவைத்தார்கள் அதன் பெயர் தேசிப் புல்/எலுமிச்சைப் புல் (Lemongrass). “மதராஸி?” என்று ஒரு குரல் கேட்டது, திரும்பி பார்த்தேன் tea கடைக்காரர் “ஆம்” என்றேன்.  Madras lorry என்று இரண்டு கைகளை வைத்து ஸ்டேரிங் சுற்றுவது போல் சைகை காண்பித்தார். அவர் இதற்கு முன்னாள் madras-கு lorry-ல் பயணித்துள்ளார் என்பது புரிந்தது.  இப்பொது Tea கடை வைத்துள்ளார். Tea நன்றாக இருந்தது 10 ரூபாயை கொடுத்துவிட்டு எதையோ யோசித்தவாறு இருளை ரசித்துகொன்டே கால்கள் தகும் விடுதியை நோக்கி நடந்தது.

Who’s the hero… Who’s the hero, காக்க  வந்த  வாத்தியாரோ..,  alarm tone அலறியது Alarm-off பொத்தனை தொட்டு விட்டு மணியை பார்த்தேன் காலை 6.  காலைக்கடன்களை முடித்துவிட்டு ஒரு black tea போட்டுகொண்டு புறப்படுவதற்கு ஏதுவாக வாங்கிய பொருள்களை  bag-ல் அடுக்கி வைத்தேன்.   8:30-க்கு ரயில்.  குளித்து முடித்து தயாராகி எல்லாவற்றையும் சரிபார்த்து Power Saver Holder-ல் உள்ள Access Card-யை எடுத்துக்கொண்டு ஹோட்டல் அறையை விட்டு வெளியேற ஆயத்தமானேன்.  அறைக்கதவு மூடியது.  Card-யை reception-ல் கொடுத்து அறை எண் 307 என்று சொல்லி காத்திருந்தேன்.  கணினியில் சரிபார்த்து “No due sir, Thank you” என்றார் சிரித்த முகத்துடன். ஹோட்டலை  விட்டு வெளியேறி ரயில்வே ஸ்டேஷன்க்கு ஆட்டோ பிடித்தேன், அதே 100 ரூபாய்.  7:50 மணிக்கு ஸ்டேஷனை அடைந்தேன். 

Sainagar சின்ன ஸ்டேஷன், ஆனால்  இப்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.  தண்ணீர் கேன்களை தோள்மீது சுமந்தவாறு ஒரு குழு,  ஒருவர் தலைமை தாங்க (tour agent) கையில் ஒரு பேப்பர் வைத்திருந்தார் இவரை சுமார் 20 நபர்கள் பின்தொடர இரண்டு மூன்று குழுக்கள், குடும்பமாக சில குழுக்கள்,  நண்பர்களாக சில குழுக்கள்.  ஸ்டேஷனில் காலை உணவு மற்றும் தண்ணீர் விற்பனை படு ஜோராக இருந்தது.  இரண்டு தண்ணீர் போத்தல் வாங்கிக்கொண்டு நடந்தேன்.  சென்னை செல்லும் Sainagar எக்ஸ்பிரஸ் நடைமேடை 2-ல் இருந்து புறப்படும் என்று  ஹிந்தி மற்றும் இங்கிலிஷ்-ல் அறிவிப்பு வந்துகொண்டிருந்தது.  இந்தமுறை sleeper coach S3-ல் எனக்கு ஒதுக்கப்பட்ட 56 (Side upper ) இருக்கையில் அமர்ந்தேன்.  எனக்கு எதிரே 55 (Side Lower)-ல் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தணிகாச்சலம் என்பவர் இருந்தார்,  அவருடைய மனைவி அவருக்கு பக்கவாட்டு (lower) இருக்கையில் இருந்தார்.  மற்றும் வயதான 3 பாட்டிகளும் lower, middle, middle இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.  ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு நேற்று என்ன நடந்து என்பதை பேசிக் கொண்டுஇருந்தார்கள்.  ரயில் 8:35 -க்கு புறப்பட்டதும்,  பாட்டிமார்கள் வீட்டிலிருந்து கட்டிவந்த புளியோதரையை (கெட்டுப்போகவில்லை, நன்றாக மனம் வீசியது) திறந்து சாப்பிட ஆரம்பித்தனர்.  அதில் எனக்கும் கொஞ்சம் கொடுக்கப்பட்டது.  இந்த சூழல் தான் ஒரு யாத்திரைக்கான அறிகுறி.  அதைவிடுத்து, குளிர்சாதன வகுப்பில் திரைச்சீலையை மூடிக்கொண்டு அருகில்  இருப்பவர்களிடம் சகஜமாககூட பேசாமல் போய்வருவது யாத்திரை இல்லை.  எங்கள் பெட்டியில் எல்லோரும் இறங்கும் இடம் சென்னை தான்.  அதனால் வழியில் இருக்கை மாற்றம் இருக்காது.  நான் எடுத்துச் சென்ற கையடக்க water heater-ல் எல்லோருக்கும் black Tea போட்டுக்கொடுத்தேன், தாஜ்மஹால்-Tea bag மற்றும் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு எடுத்துச் சென்றிருந்தேன்,  இது tea போடும் வேலையை சுலபமாக்கும்.

பாட்டிமார்கள், அவர்கள் பயணப்பட்ட காசி, ராமேஸ்வரம், ஹரித்துவார்-ல் உள்ள கங்கை, திருப்பதி கதைகளை பேசிக்கொண்டு வந்தனர்.  பின்னர் தணிகாச்சலம் அவர் சென்றுவந்த “Char Dham” பற்றி பேசினார்,  Char Dham என்பது Uttarakhand மாநிலத்தில் உள்ள  Yamunotri, Gangotri, Badrinath மற்றும் Kedarnath ஆகிய 4 புன்னியஸ்தலங்களை குறிக்கும்.  இந்த நான்கு இடங்களுக்கும் சென்றுவர Rishikesh, Haridwar, Dehradun, Delhi ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 14 வழித்தடங்கள் இருக்கின்றன.  நம் பயணத்திற்கு ஏற்ப சரியான வழியைத் தேர்வுசெய்ய வேண்டும்.  பின்னர் நம் விவரங்களை https://uttarakhandtourism.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.  நமக்கு ஒரு Registration ID வழங்கப்படும்.  இந்த ID இல்லாமல் Char Dham யாத்திரைக்கு அனுமதிக்கப்படமாட்டாது.  இது அவர் சொன்ன கதையின் முக்கிய தகவல்.  இதில் அவர் பயணப்பட்டு சிரமப்பட்ட கதைகளும் உண்டு.  மணி 2-யை கடந்த வேளையில்  மத்திய உணவிற்காக பாட்டிமார்கள் இன்னொரு பொட்டலத்தை திறந்தனர் அதில் பூரி இருந்தது, தனியாக தக்காளி தொக்கு இருந்தது, இரண்டு எனக்கும் கொடுக்கப்பட்டது.  சாப்பிட்டுவிட்டு வேடிக்கை பார்க்க விருப்பமில்லை அதே வழித்தடம்,  தணிகாச்சலம் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தார், நான் மேல் இருக்கையில் சிறிது கண் அயர்ந்தேன்.

மாலை 5 மணியளவில் ரயில் Kalaburagi station-ல் நின்றது.  பெட்டியில் கொஞ்சம் சத்தம் அதிகமானதால் தூக்கம் கலைந்தது. பாட்டிமார்கள், புனியஸ்த்தலங்கள், கோவில் என்றிருந்த பெட்டியில், 15-க்கும் மேற்பட்ட கல்லுரி பெண்கள் அவர்களுக்கே உரிய குறும்புத்தனத்துடன் அமர்வதுக்கு இருக்கையை தேடிக்கொண்டு இருந்தனர்.  இளகியமனம் உள்ள பாட்டிமார்கள் இடம்கொடுத்தார்கள். இவர்கள் அடுத்த நிறுத்தத்தில்(wadi) இறங்கிவிடுவார்கள் தினசரி ரயிலில் பயணிப்பவர்கள்.  இந்த இடத்தில உள்ளவர்கள் Kannada, Telugu, Hindi மூன்று மொழியையும் பேசுவார்கள்.  இந்த station மூன்று மாநில எல்லையின் நடுவே உள்ளது.  தணிகாச்சலத்திற்கு hindi-தெரியும் அந்த பெண்களுடன் பேசஆரம்பித்தார். (தணிகாச்சலத்திற்கு வயது 50 மேல் இருக்கும்).  பின்னர் இவர் பிரதான மொழிபெயர்ப்பாளர் ஆனார். பாட்டிகள், அவரது மனைவி என அனைவரும் தமிழ்நாட்டு சாப்பாட்டை பற்றி அந்த பெண்களிடம் பேசினார்கள்.  குறிப்பாக தக்காளி சட்னி, கார சட்னி, தேங்காய் சட்னி பற்றியே அதிகம் பேச்சு.  பேச்சு அதிகாகமாகி பெயர் மற்றும் மொபைல் எண் பரிமாறும் அளவிற்கு பாட்டிகளும், தணிகாச்சலத்தின் மனைவியும் சென்றனர். How innocent they are and their conversation.  சென்னை வந்தா போன் பன்னுங்க, வீட்டுக்கு வாங்க, T-Nagar Ranganathan street கூட்டிட்டு போறோம் என்று அவர் மனைவி சொல்ல அதை தணிகாச்சலம் அந்த கல்லூரி பெண்களுக்கு மொழிபெயர்த்தார்.  வண்டி  wadi Jn-யை வந்தடைந்தது.  கல்லூரி பெண்கள் பாட்டிமார்களிடம் ஆசீர்வாதம் பெற்று விடைபெற்றனர்.

இட்ஸ் டீ டைம், Wadi Jn-ல் 8 Tea மற்றும் vada pav வாங்கி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.  என்னிடம் tea bag மற்றும் பனங்கற்கண்டு காலியாகிவிட்ட காரணத்தினால் tea வெளியில் வாங்கப்பட்டது.  இரவு சாப்பாடும் வெளியில் வாங்கப்பட்டது.  இரவு 9 மணிக்கே அனைவரும் உறங்கிப் போனோம், காரணம் பாட்டிமார்கள் குறைந்த ஒலியுடன் போட்ட இளையராஜா பாடல்கள்.  Sleeper Coach-ல் ஒரேயொரு குறைதான் Restroom.  பொறுப்பு எல்லோருக்கும் வேண்டும் அப்போதுதான் ஒரு இடம் சுத்தமாக இருக்கும்,  ரயில்வே நிர்வாகத்தை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது.  நமக்கும் சிறிது அக்கறை, பொறுப்பு வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.  ஆனால் AC Coach-ல் இந்த குறை இல்லை அடிக்கடி கழிவறை சுத்தம் செய்யப்படுகிறது.  ஆனால் AC Coach-ல் உள்ள சகபயணிகளின் அணுகுமுறை மற்றும் அடுத்தவர் மீதான சந்தேகம் ஆகியவை ஒருவனை தனிமைப்படுத்திவிடுகிறது.

காலை விழிப்பு வந்தபோது ரயில் ஜோலார்பேட்டை Jn- நின்று கொண்டிருந்தது.  நம் இடத்தின் எல்லைக்குள் வந்துவிட்டோம் என்ற உணர்வு.  பல்துலக்கி முடித்தேன்.  தணிகாச்சலம் எனக்கு முன்னரே எழுந்து Jn-platform-ல் நடந்துகொண்டிருந்தார்.  நானும் அவருடன் நடைப்பயிற்சியில் இணைந்து கொண்டேன்.  20-நிமிடம் கழித்து ரயில் காட்பாடியை நோக்கி புறப்பட்டது.  பாட்டிமார்கள் இன்னும் எழவில்லை.  தணிகாச்சலம் வேலை mood-க்கு அவரை தயார்செய்துகொண்டுஇருந்தார்.  Washermanpet-ல் உள்ள ஒரு சேட்டு துணிக்கடையில் வேலைசெய்கிறார்.  ரயில் காட்பாடியை வந்தடைந்தது.  இரண்டு tea வாங்கி ஆளுக்கொன்று குடித்தோம். கேதார்நாத், பத்ரிநாத் மறுபடியும் குடும்பத்தோட போற மாதிரி இருக்கேன் என்றார், போகும்போது சொல்லுங்க என்றேன். ரயில் அரக்கோணம் வந்தபோது பாட்டிமார்கள் விழித்துவிட்டனர்.  பெட்டியில் உள்ளவர்கள் அவரவர் பொருட்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி இறங்குவதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  ரயில் பெரம்பூர் station-யை நெருங்கிக்கொண்டிருந்தது.  நான் எனது பொருட்களை எடுத்து கீழே வைத்து பெரம்பூர்-ல் இறங்க தயாரானேன்,  பாட்டிமார்கள், தணிகாச்சலம் இவர்கள் இறங்குமிடம் சென்னை சென்ட்ரல். பாட்டிமார்கள் சாவகாசமாக உக்கார்ந்துகொண்டு இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு வந்தார்கள். ரயில் பெரம்பூர்-ல் நின்றது. தணிகாச்சலம் என் மொபைல் number-யை கேட்டு வாங்கிக்கொண்டார், பேரு என்னங்க என்றார், கார்த்திக் என்றேன்.

“உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை 

ஒரு கதை என்றும் முடியலாம் 

முடிவிலும் ஒன்று தொடரலாம் 

இனியெல்லாம் சுகமே….”

இளையராஜாவின் இசையில், கங்கை அமரன் எழுதி, கே.ஜே யேசுதாஸ்  பாடிய பாடல்  குறைந்த சத்தத்துடன் பாட்டிமார்களின் mobile-ல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க, தணிகாச்சலத்திடமும், பாட்டிமார்களிடமும் தலையசைத்து விடைபெற்றேன்.

 -இளையாள் கார்த்திகேயன்

✍️ சுபம் ✍️

Leave a comment