அழியா நினைவுகள்…

சில புத்தகத்தின் பக்கங்களை திருப்பியது, அடுக்கு மாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் குழந்தைகள் அம்மாவின் கையை பிடித்து நடை பழகியது, தத்தக்கா புத்தக்கா-னு நடக்கும்போது அம்மாவின் முகபாவனைகள், ஒரு குறுநடை நடந்து மூன்றாவது அடி வைக்க முயற்சித்து அம்மாவை ஒரே எட்டில் தாவி அணைக்கும் குழந்தை, சிறுவர்களின் விளையாட்டு இவைகளின் தாக்கம் என் அம்மா என்னுடன் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் என்ற எண்ண அழுத்தத்தின் பிரதிபலிப்பே இந்த பதிவு. இது சிறுகதையோ, கற்பனைகதையோ இல்லை. என்னுடைய பாலக மற்றும் விடலை பருவத்திற்கு இடைப்பட்ட ஒரு வார கால வாழ்க்கையை எண்ண ஓட்டங்களின் உதவியுடன் எழுத்துக்களின் வழியே வாழ்ந்துபார்க்க ஆசைப்பட்டேன்.

1995: ஜனவரி – அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடத்தூர் கிராமம், தர்மபுரி மாவட்டம்.

மாலை 4.30 பள்ளிக்கூட லாங் பெல் சத்தம் கேட்டவுடன் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகினர். நான் 8th B-பிரிவில் இருதேன், சமூக அறிவியல் பாடம் நடைபெற்று முடிந்தது.

வாத்தியார், டேய் பசங்களா நாளைக்கு வேர்ல்ட் மேப்-ல நான் சொன்ன கண்டங்கள் எல்லாம் வரைஞ்சு எடுத்துட்டு வந்துடுங்க, மேப் திருவள்ளுவர் புக் ஸ்டோர்-ல சார் சொன்னாரு-னு சொல்லி வாங்கிக்கோங்க கம்மி ரேட் தான். Ok sir – ஒண்ணா சத்தமா சொன்னோம். சரி நீங்க கிளம்புங்க.

டேய் சீனிவாசா அந்த லவ் பேர்ட்ஸ் பாட்டு புக் குடுடா படிச்சிட்டு குடுத்துடுறேன். டேய் உங்க அப்பா வாத்தியார் டா படிக்கும்போது மாட்டிக்கிட்ட?

டேய் அதெல்லாம் நான் பாத்துகிறான் டா.

இந்தாடா, ஏதாவது ஆச்சு நீதான் அடுத்த தேர் சந்தையில(திருவிழா கடை) வாங்கி தரணும், இல்லனா 1 ரூவா குடுத்துடு. சரி டா பாத்துக்கலாம்

bag-யை பின்னால் மாட்டிக்கொண்டு , என்னுடைய கற்பனையில் செய்த பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்து கையால் ஆக்சிலேட்டர்-யை திருகினேன் , வண்டி வீட்டுக்கு செல்ல தயாரானது. இது கால்களை கொண்டு ஓடும் வண்டி.

திரு race-க்கு வரையடா, இல்ல டா ஸ்லொவ்-வ போவோம். ஒகே டா

திருவேங்கடம் எங்க தெரு தான் அவங்க வீட்டுல இருந்து ஒரு 5 வீடு தள்ளி தான் எங்க வீடு.

பள்ளி நுழைவாயிலை விட்டு வெளியேறி, சார்பதிவாளர் அலுவலகத்தை கடந்து வீட்டிற்கு செல்ல தார் சாலையை கடக்க இரண்டு புறமும் கவனித்தேன், இடது புற மூலையில் பார்த்திபன் Tea கடை,கூட்டம் அதிகமாக இருந்தது சற்று பீடி-புகை மண்டலமும் தென்பட்டது. இவரிடம் உளுந்து மற்றும் பருப்பு வடை 1 ரூவா – கு மூணு. Tea- சற்று புகை வாசம் வீசும் விறகு அடுப்பில் போடப்பட்ட tea. சரண்யா பேருந்து ஹாஸ்பிடல் நிறுத்தத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது, வலது புறம் ஒரு பெட்டிக்கடை அதை அடுத்து அரசு மருத்துவமனை

பேருந்து சில பயணிகளை இறக்கிவிட்டு இரண்டு விசில் சத்தத்துடன் பேரூந்துநிலையத்தை நோக்கி சென்றது.

டேய் இப்போ வாடா race-க்கு என்று சொல்லி திரு வண்டியை முறுக்கிக்கொண்டு ஓடினான்.

நான் தார் சாலையை கடந்து ராஜா மளிகைக்கடை சுவற்றில் லவ் பேர்ட்ஸ் சினிமா Poster-யை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தெருவின் முனையில் இடது பக்கம் திரும்பி,வலது திரும்ப திருவேங்கடம் அவன் வீட்டை அடைந்திருந்தான்.

நான் தான் win-னு என்று சொல்லிக்கொண்டு என்னை பார்த்து சிரித்தான். நானும் சிரித்தேன்.

ஒரு பாழடைந்த( நான் பிறப்பதற்கு முன்பாகவே பாக பிரிவினை காரணமாக கேட்பாரற்று கிடக்கிறது) தியேட்டர் உரிமையாளர் வீட்டை கடந்து, இரண்டு வீடு தள்ளி, தெருவின் முடிவில் சீமை ஓடுகள் போர்த்திய மூன்று வீடுகள், மூன்றும் எங்களுடையது, காலியிடத்தில் இரண்டு முருங்கை மரம், ஒரு வேப்பம் மரம், இரண்டு தென்னை மரம், இரண்டு நீலகிரி மரம், ஒன்பது மல்லிப்பூ செடிகள் (இரண்டு குண்டுமல்லி), ஒரு மருதாணி செடி ஒரு எலுமிச்சை செடி வைத்திருந்தோம். வீட்டின் பின்புறம் 5 ஏக்கர் வானம் பார்த்த கோவில் நிலம் 5 வருட குத்தகைக்கு எடுத்திருந்தோம்.

முகம்,கை,கால் கழுவிட்டு சாப்பிடவாடா என்றது அம்மாவின் குரல்.
சோறு வேணா அம்மா, சோறு இல்ல டா குலுக்கு ரொட்டி.
முகம் பிரகாசம் அடைந்தது.
ராகி ரொட்டி-யை(ஆரிய ரொட்டி எங்க ஊரு வட்டார சொல்) வெல்ல பாகில் ஊறவைத்த ஒரு இனிப்பு வகை தான் குலுக்கு ரொட்டி.

அம்மா இன்னும் ரொட்டி நல்ல ஊறனும். இப்ப தான் டா பண்ணேன். சட்டில போட்டு உறி-ல வெச்சிடு நாளைக்கு சாப்புட்றன்.

எங்க வீட்டுல நான்தான் கடைக்குட்டி, எனக்கு 4-அக்கா 5-அண்ணன்மார்கள். மொத்தம் வீட்டில் 12 நபர்கள். ஒரு வீட்டுல நான், அப்பா, அம்மா, சின்ன அக்கா, சின்ன அண்ணன் இருக்கோம். இன்னொரு வீட்டுல அண்ணா அண்ணி அவங்க பையன் இருக்காங்க. இன்னொரு வீட்டுல ஒரு அண்ணா அண்ணி இருக்காங்க. ஒரு அண்ணா மிலிட்டரி- ல , 3-அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. எங்க வீட்டின் கதவு பூட்டப்படுவது மிகவும் அரிதான ஒன்று. எதாவது கோவில் குளம்-னு போனா தான் பூட்டப்படும். அம்மாவுக்கு விவசாயம் பண்ணனும்-னு ஆசை, அதான் வீட்டுக்கு பின்னாடி இருக்கற கோவில் நிலத்தை 5 வருசத்துக்கு குத்தைகைக்கு எடுத்தோம். அப்பா கொஞ்சம் மிடுக்கான ஆள், வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை, உஜாலா சொட்டு நீளம் போட்டுஇருக்கணும் அளவாக, இல்லனா அம்மாவுக்கு திட்டுவிழும்.

ரொட்டியை சாப்பிட்டு, குண்டுமல்லி பறிச்சு ஐயர் வீட்டுல குடுக்கணும். மாலை 5.00 டியூஷன், எங்க அப்பா தான் நடத்துறாரு 15 பசங்க பொண்ணுங்க வராங்க. கொஞ்ச நேரம் படிப்பு கொஞ்ச நேரம் அரட்டை7.30 டியூஷன் முடிஞ்சுடும். இரவு சாப்பாடு களி, கடைசி சின்ன உருண்டை ( சுத்தி வழிச்ச களி- னு சொல்லுவோம்) அதுதான் எனக்கு புடிக்கும். இந்த சின்ன உருண்டைக்கு எங்களுக்குள்ளே போட்டி நடக்கும். கடைசில அது எனக்குதான் கிடைக்கும் 8.00 மணிக்கு எல்லாரும் சாப்பிட்டு படுக்க ஆரம்பிச்சுடுவோம்.

அறுவடை முடிஞ்சு சோளக்கதிர் களத்தில் காயவைக்கப்பட்டு இருந்தது, அவரை, துவரை, வேர்க்கடலை இன்னும் அறுவடை செய்யப்படவில்லை. அம்மாவும் நானும் களத்திற்கு காவலுக்கு செல்ல தயார் ஆனோம். களம் என்பது அறுவடை முடிந்த நிலத்தின் ஒரு பகுதியில் அல்லது அறுவடை செய்யும் நிலத்தின் பக்கத்தில் சதுரவடிவில் புல், செடி, கொடிகளை செதுக்கி எடுத்துவிட்டு மூன்று அல்லது நான்கு முறை பசுமாட்டு சாணத்தை கரைத்து மொழுகி காய வைக்க வேண்டும். பின்னர் அறுவடை செய்த கதிர்களை கொட்டுவார்கள். தங்கி காவல் காக்க சோளத்தட்டு அல்லது கூரை அமைக்க பயன்படுத்தும் பொருள்களை கொண்டு பின்னப்பட்ட ஒரு கூடாரம். தானியங்கள் வீடு சேரும் வரை இது தான் வீடு.

அம்மா, தூக்குப்பாத்திரம் எடுத்துக்கவா, எங்கிட்ட காசு இல்ல உங்க அப்பாகிட்ட 2-ரூவா வாங்கிக்கோ.
அப்பா, அம்மா 2-ரூவா வாங்கிக்க சொல்லுச்சு காலை-ல Tea வாங்க. சட்ட பாக்கெட்-ல இருக்கும் எடுத்துக்கோ.

2-ரூவா எடுத்து அம்மாகிட்ட கொடுத்தேன், அம்மா அவங்க முந்தானையின் நுனியில் வைத்து சுருட்டி முடிச்சு போட்டுகொண்டு, கம்பளி எடுத்துக்கோ போகலாம் என்றார். தலைமேல் கம்பளி, ஒரு கை-ல தூக்கு பாத்திரம் அம்மா கூட பேசிக்கொண்டே ஒத்தையடி பாதையில நடந்தோம். வெளிச்சம் கிடையாது, நிலவெளிச்சம் மட்டும் தான்.

அம்மா முன்னாடி நடக்க, கையில் ஒரு தடியை கொண்டு புற்கள் மீது தட்டி பின்தொடரும் என்னை பூச்சு,பாம்பு அண்டாமல் பாத்துக்கொண்டார்.

அம்மா எதாவது பேசிக்கிட்டே வா பயமா இருக்கு. வீட்டுல இரு சொன்ன கேக்கிறாயா, காலைல 4 மணிக்கு ஒரு Tea குடிக்கிறதுக்கு என் உயிர வாங்குற, கடைசி கடைசியா பொறந்துட்டு அட்ட மாறி கூடவே ஒட்டியிட்டுஇருக்க.

இந்தமாரி கூட பேசு அமைதியா வாராத, பின்னாடி கொலுசு சத்தம் எல்லாம் கேக்குது.

சரி விடுகதை போடுறேன் பதில் சொல்லு, ஒகே

  "காலக்கடிக்கும் செருப்பு இல்ல, காவல் காக்கும் நாய் இல்ல அது என்ன ? " என்ன சொல்லு பாக்கலாம்"

தலையை கீறிக்கொண்டு, அம்மா, தெரியலாம்மா, “முள்ளு” டா, அம்மா, அது கடிக்காது மா குத்தும் . இன்னொன்னு சொல்லுமா கண்டிப்பா கண்டுபுடிக்கிறேன்.

    "கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். அது என்ன?" 

அம்மா ரொம்ப கஷ்டமா சொல்ற, தெரியல மா, “சோளக்கதுறு” டா

நீ படிச்சு என்னத்த கிழிக்க போறன்னு தெரியல. தண்டமா, காசுக்கு கேடா உன்ன படிக்கவைக்குது.
அப்போ அவங்க என்ன நெனச்சு சொன்னாங்க-னு தெரியல. But இப்போ உயிரோட இருந்திருந்தா என் கூட குறைஞ்ச பட்சம் ஒரு 10 Country Travel பண்ணியிருப்பாங்க. அப்போ அப்போ நெனச்சுப்பன். உண்மைய சொல்லணும்-ன அவங்க கூட travel பண்ண எனக்குதான் கொடுப்பன இல்ல. ரொம்ப unlucky.

அவங்க செருப்பு பயன்படுத்தி நான் பாக்கல, எதாவது விசேஷம் என்றால் மட்டுமே பயன்படுத்துவாங்க. பெரிதாக படிக்கவில்லை என்றாலும் வீட்டு நிர்வாகம்(financially) எல்லாமே இவர் கையில் தான். பேங்க்-ல முதலில் கைநாட்டு தான் வைப்பாங்க. என் அக்கா மற்றும் அண்ணன்மார்கள் தான், “வாத்தியார் பொண்டாட்டி கைநாட்டு வச்சா அப்பா கெளரவம் என்ன ஆகும்-னு” கையெழுத்து போட கற்றுக்கொடுத்தார்கள்.

அவங்க அந்த கையெழுத்தை போடுவதை பாக்க அவ்வளவு அழகாக இருக்கும், “ராஜம்மாள்” “ரா” எழுத ஆரம்பித்து உடனே light-அ நாக்கு வெளியே எட்டிப்பார்க்கும் “ஜ” எழுதும்போது தல speed Breaker-ல ஏறி இறங்கின மாதிரி அசைந்து கீழே வந்து ஒரு வட்டம் போடும். “ம்மாள்” எழுதி “ள” மேல புள்ளி வைக்கும் பொழுது “ராஜம்மாள்” ladder மாறி மேல ஏறி நிற்கும், பின்னர் அவர் முகத்தில் ஒரு “முதுகலை பட்டம்” வாங்கிய சந்தோசம் தெரியும்.

என்னடா சத்தமே இல்லாம வர, நீ சொன்னதை யோசிச்சிட்டு இருக்கன் மா. டேய் அது சும்மா எல்லாரும் அவங்க பசங்கள சொல்றது தான். நீ கவல படாத நல்ல படிச்சா நல்ல வேலைக்கு போலாம். பேசிக்கொண்டே களத்தை அடைந்தோம், அதிகாலை பனித்துளிகளில் இருந்து பாதுகாக்க சோளக்கதிர் மேல் பிளாஸ்டிக் சாக்குபையை கொண்டு தைக்கப்பட்ட தார்பாய் மூடப்பட்டிருந்தது. அதன் பக்கவாட்டில் இரண்டு tape-கட்டில் ஒன்றில் என் கம்பிளியை வைத்தேன், தூக்கு பாத்திரத்தை சோளதட்டு கூடாரத்தில் வைத்துவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தேன். லேசான பனி, அம்மா torch light அடித்து வயலில் பன்றிகள் நுழையும் இடத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு இனொரு கட்டிலில் அமர்ந்தார். நான் என்னை முழுவதுமாக கம்பளிக்குள் நுழைத்து வானத்தில் உள்ள நட்ச
சத்திரங்களை எண்ணிக்கொண்டுஇருந்தேன்

அம்மா, ஒரு கதை சொல்லுமா என்றேன், டேய் எழுந்து வீட்டுக்கு போடா, காவல் இருக்க வந்தயா இல்ல கதை கேக்க வந்தயா. எவனனும் வேணாம் நானே பாத்துக்கிறேன் சொன்னேன். அந்த மனுஷன்தான் உன்ன அனுப்பிவச்சது, அவர சொல்லணும். கோவப்படாத மா, கதை சொன்ன அப்படியே தூங்கிடுவேன்.

வீட்டுப்பாடம் முடிச்சியா,.
இல்ல, அத முடிக்காத கதை கேளு.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்தேன், தங்கமீன் கத சொல்லவா, ம்ம்ம் சொல்லுமா, என்றேன்,

ஒரு ஊருல……..-னு ஆரம்பிச்சு, கதைல மீனுக்கு தூண்டில் போடறதுக்கு முன்னாடியே நான் தூங்கிட்டேன்.

காலை சுமார் 4-மணி இருக்கும், டேய் Tea-வாங்க போகலையா, கம்பிளியிலிலிருந்து தலை மட்டும் எட்டிப்பார்த்து time-என்னமா , 4-மணி இருக்கும் வண்டிச்சத்தம் கேக்குதுடா. பார்த்திபன் கடை(Tea-கடை) தொறந்துட்டு இருப்பான். குடத்திலிருந்து தண்ணி எடுத்து முகம் கழுவி, வாய்கொப்பளித்து குளிரில் என்ன கொஞ்சம் சூடாகிக்கொண்டேன். தூக்கு பாத்திரம், 2-ரூவா வாங்கிக்கொண்டு ஒத்தையடி பாதையிலிலிருந்து பெரிய மண் road-வரைக்கும் அம்மா துணைக்கு வந்தாங்க.

மண் ரோடு வந்ததும், தூக்கு பாத்திரத்தை மணிக்கட்டில் மாட்டிக்கொண்டு, எனது ஆஸ்தான பைக்கை ஸ்டார்ட் செய்து accelerator-யை முறுக்கிக்கொண்டு ஓட்டம் எடுத்தேன், ஏன் என்றால் இந்த தெருவில்தான் கொஞ்சம் நாய்கள் அதிகம், நேராக பார்த்திபன் கடைக்கு சென்று இரண்டு tea-வாங்கிக்கொண்டு மெதுவாக நடந்து களத்திற்கு வந்தேன். அம்மா 4-மணி காவலை முடித்துக்கொண்டு களத்திற்கு வந்தார்.

அம்மாக்கு tea-யை கொடுத்தேன், நானும் குடித்தேன். குடித்துமுடித்துவிட்டு நான் மறுபடியும் படுத்துக்கொண்டேன்.

படுத்துக்கொண்டே world map யாரோட book-ல இருந்து கிழிக்கலாம் என்று யோசித்துக்கொண்டேன். காலை சுமார் 6.00 மணிக்கு காவல் முடித்து சோளக்கதிர் மேல் உள்ள தார்பாயை நீக்கிவிட்டு வீட்டிற்கு சென்றோம். அக்கா தூங்கிக் கொண்டிருந்தார், அவங்க பழைய map practice book-ல நடுவில் இருந்த world map-யை கிழித்து, அண்டார்டிகா-வெள்ளை நிறம், ஆப்பிரிக்கா- பழுப்பு நிறம், ஆசியா- பச்சை நிறம், ஆஸ்திரேலியா- வெளிர் பழுப்பு நிறம் என்று அடையாள படுத்திவிட்டு அதற்கான பெயர்களை எழுதி Map-ன் Header-ல கார்த்திகேயன் 8th-B என்று எழுதி மடித்து என்னுடைய School Bag-ல வைத்துவிட்டு ஸ்கூல் செல்ல தயாரானேன். School uniform துவைக்கப்படவில்லை, ஒரு வருசத்துக்கு 2-Set Uniform தான் வீட்டுல எடுத்து தருவாங்க அத கிழியாம பாத்துக்கவேண்டியது என்பொறுப்பு, அதை மீறி கிழிந்தால் அந்த வருடம் முடியும் வரை patch-ஒட்டி தான் பயன்படுத்தனும்.

8.30 மணிக்கு செஞ்சோள கூல் தயாராகி இருந்தது, இரண்டு பெரிய டம்பளர் அளவு எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு குடித்துவிட்டு, வண்டியை-யை கிளப்பினேன் நேராக திரு வீட்டுக்கிட்ட போய் நின்றது.

டேய் திரு ball எடுத்துக்கோ என்றுசொல்லி நியாபக படுத்தினேன். இருவரும் பத்து நிமிடத்தில் ஸ்கூல் Ground-ல இருந்தோம், 8.45 to 9.30 வரைக்கும் football-தான் காலெல்லாம் செம்மண் கலரா மாறிடும், 9.50-கு school prayer.

கொடி கம்பத்தின் முன் “ப”-வடிவில் நிற்க வேண்டும். வலது புறம் 6-ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பித்து இடதுபுறம் 12-ஆம் வரை வகுப்பு நிற்கவேண்டும். முதலில் ஒரு Parade , தமிழ்த்தாய் வாழ்த்து, மறுபடியும் Parade, தேசியகீதம் கடைசியாக Important Announcement எதாவது இருந்தால் உரக்க சொல்லுவார்கள். அன்றைக்கும் ஒரு Announcement.,

சாரண இயக்க மாணவர்கள் Prayer முடிந்தவுடன் இங்கேயே நிற்கவும். என்று Scout Master கூறினார்.
மனதில் ஒரு படபடப்பு “Delhi”-ஆ, இல்ல மறுபடியும் “Hogenakkal”-ஆ, “kolkatta”-வா scout பசங்க பேசிக்கொண்டனர். ஏன்னா 5-மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு 10-பசங்க(என்னையும் சேர்த்து) Hogenakkal-ல 5 நாள் Patrol Leader Training camp போயிடு வந்தோம்.

டேய் நான் delhi-னா வரன் இல்லனா நான் வரலடா. டேய் எந்த camp-ஆ இருந்தாலும் போகலாம் நல்ல இருக்கும் டா, என்றான் திரு.
Scout Master முன்னாடி ஒரு 25 மாணவர்கள் assemble ஆனோம்.
“scout பாய்ஸ் சலூட்” என்று கமன்ட் வைத்தது. பெருவிரலை சுண்டுவிரல் மீது வைத்து மூன்று விரல்களால் சலூட் அடித்தோம். “Scout Promise” என்றார்.

"On my honer i will do my best
 to do my duty to god on my......

Promise முடித்தோம். இந்த வாரம் மூக்கனுர் மலை மலையேற்றம்(trekking camp) இருக்கு வர விருப்பம் இருக்கறவங்க ராகவனிடம் பேரு குடுத்திடுங்க. ஒகே சார். 8th-C என்றான் ராகவன். Patrol Leader’s கண்டிப்பா வரணும். scout dispose.

வேகவேகமாக கிளாஸ்-கு ஓடினோம். தமிழய்யா கிளாஸ் எடுத்துக்கொண்டு இருந்தார் ஏன் late, Scout என்றேன். போய் உட்காரு.

பாட்டு புக் எங்கடா, டேய் நேத்து களத்துக்கு காவலுக்கு போனேன் டா படிக்கல, நாளைக்கு தரேன்.
2-வது period சமூக அறிவியல், சார் கிளாஸ்க்கு வரும்போது வரைஞ்சு முடிச்ச map-லாம் டேபிள் மேல இருந்துச்சு. சார் சொன்ன மாதிரி எல்லாரும் திருவள்ளுவர் புக் ஸ்டோர்ல தான் மட்டி பப்பேர் மேப் வாங்கியிருந்தாங்க ஆனா ஒன்னு மட்டும் வெள்ளைக்கலர் மேப் அது என்னுடையது. சார் என்னோட மேப் எடுத்து பார்க்கக்கூடாதுனு கடைசியிலிருந்து ஒரு 10 map-கு முன்னாடி வச்சேன். வணக்கம் சார்(கோரஸ்). உக்காருங்க, டேபிள் மேல இருக்கும் மேப்புகளை பாத்திட்டே வந்து correct-அ என்னோடத எடுத்தாரு. ஏன்ன அதுதான் தனியா வெள்ளை கலர்ல தெரியுது.

கார்த்திகேயன் வா இங்க.
இது என்ன, மேப் சார். அதுதெரியுது,
எந்த புக்-ல இருந்து கிழிச்ச,
இல்ல சார் கடைல தான் வாங்கினேன். எந்த கடை, திருவள்ளுவர் புக் ஸ்டோர் சார்.
பசங்களா இந்த மேப் அங்க இருக்கா? இல்ல சார்(பசங்க கோரஸ்).
வா, வாத்தியார் பையனே பொய் சொன்ன மத்த பசங்களும் அதைத்தானே செய்வாங்க.
உங்க அப்பாகிட்ட நன் தான் அடிச்சேன்னு சொல்லு, சாயங்காலமா Tea-கடைல உங்க அப்பாவை பாத்து பேசுறான்.

சார் அப்பாகிட்ட சொல்லவேணாம் சார், அவரு நெறைய அடிப்பாரு, இன்னும் ரெண்டு அடிகூட சேர்த்து அடிச்சிக்கோங்க சார், இனிமே கடைல மேப் வாங்கி வரைஞ்சிட்டு வரன் (காது புடிச்சு திருகி முதுகுல ரெண்டு அடி, கைல ரெண்டு அடி). இங்கேயே முடிச்சிகிட்டன், அப்பா கிட்ட சொன்ன கதை கந்தல்
புளியகுச்சி + வேப்பங்குச்சி ரெண்டு ஒண்ணா கட்டின குச்சில அடி விழும். அதுக்கு இது எவ்வளவோ மேல்.

இண்டெர்வெல் period-ல ராகவன் வந்தான்,
கார்த்தி, மூக்கனுர் கேம்ப் ட்ரிப்கு உன் பேரு எழுதிட்டேன்டா, யாரு கேட்டு எழுத்தான, திரு தான் நீயும் வரேன்னு சொன்னான் டா.

போடா டேய், எங்க வீட்டுல அனுப்பமாட்டாங்க டா. hogenakkal ட்ரிப்-கே எங்க அப்பா கால புடிச்சு,கைய புடிச்சு, ஒரு வாரம் சாப்டாம இருந்து, ராகவன் குறுக்கிட்டு, ஒரு வாரம் சப்படலய?, இல்லடா அம்மா தான் இந்த ஐடியா குடுத்தாங்க, அப்போ அப்போ யாருக்கும் தெரியாம சாப்ட்டுக்குவேன். பட் இந்த ஐடியா அப்போ ஒர்கவுட் ஆச்சு. இந்தத்தடவ ஒர்கவுட் ஆகாது. அதுமில்லாம மூக்கனுர் மலை இங்கதான் இருக்கு எனக்கே விருப்பம் இல்ல. ஓகே டா ஈவினிங் scout கிளாஸ்-ல பாக்கலாம்.

ஈவினிங் ஸ்கூல் முடிச்சிட்டு நேர வீட்டுக்கு, வீட்டுல எல்லாரும் மல்லிப்பூ பறிச்சுட்டு இருந்தாங்க, ஒரு ஆளுக்கு ரெண்டு செடி பறிக்கணும். எனக்கும் ரெண்டு செடி (குண்டு மல்லி) இருந்தது. அம்மா,
டேய், இந்த ரெண்டு செடில பறிச்சுடுடா, சாப்பிட்டு வரன் வெயிட் பண்ணுமா என்று சொல்லி குலுக்கு ரொட்டியை ஒரு கிண்ணத்தில் போட்டுகொண்டு வாசலில் வந்து உட்கார்ந்து இரண்டு மூன்று துண்டுகளை சாப்பிட்டேன், தெருவை பாத்தேன், அப்பா வேகமா வந்துகொண்டுஇருந்தார்.

போச்சு வாத்தி வத்தி வச்சுட்டாரு அப்பா கைல மாட்டினா அவ்வளவுதான், என்று நினைத்துக்கொண்டு ரொட்டியை உள்ளே வைத்து விட்டு கையை கழுவிக்கொண்டு பூக்களை பறிக்க செடிகளுக்குள் மறைத்தேன்.

ராஜி, எங்க அவன் வந்துட்டான்னா இல்ல கிரௌண்ட்ல சுத்திட்டு இருக்கானா, வந்துட்டாங்க பூ அறுக்கிறான். வந்து அந்த Tea கொஞ்சம் போடு என்றார். எனக்கு சற்று நிம்மதி வந்தது வேகவேகமா பூக்களை அறுத்துவிட்டு மீணடும் குலுக்கு ரொட்டியை சாப்பிட சென்றேன். tea குடித்துக்கொண்டே அப்பா, இன்னைக்கு களத்துக்கு நீ போகவேணா நான் போறான், உன்னோட social சார் பேசினாரு நல்ல படிக்கறது இல்லனு சொன்னாரு, ரொட்டி சாப்பிடும் வேகம் குறைந்தது.

அதுவந்து அப்பா மேப்-கு எதுக்கு காசு செலவு பண்ணணும்னு நெனச்சு தான் அக்கா புக்-ல இருந்து கிழிச்சு வரைஞ்சிட்டு போனேன். உன் சார் இத சொல்லவே இல்ல. அவரு உங்ககிட்ட என்ன சொன்னாரு?. அடி வாங்க போரேன்னு அம்மாக்கு தெரிஞ்சிடுச்சு வேகமா வந்து, சாப்பிட்டு போய் புக் எடுத்து படிடா என்றார். அப்பா அம்மாவை பார்த்தார். தப்புச்சுட்டேண்டா சாமி-னு இடத்தை விட்டு நகர்ந்தேன். டியூஷன் முடித்துவிட்டு, வீட்டுவாசல உள்ள அப்பா கட்டிலில் நான் படுத்துக்கொண்டேன் அவரு களத்துக்கு போய்ட்டாரு.

காலை 5.30 அளவில் அப்பாவும் அம்மாவும் களத்திலிருந்து வீடு திரும்பினார், வழக்கம் போல் அம்மா சமையல் செய்ய ஆரம்பித்தார். 95-காலகட்டத்துல சமையல் செய்யறதுக்கு கொஞ்ச சிரமம், மண்ணெண்ணெய் ஸ்டவ் இருந்த கொஞ்சம் சமையல் சுலபமாக முடியும். நாங்க விறகு அடுப்பு தான் பயன்படுத்தினோம் கொஞ்சம் லேட் ஆகும். இன்றைக்கு ராகி கூல் அடுப்பின் மீது கொதித்து கொண்டு இருந்தது, எனக்கு ராகி கூல் புடிக்காது.

ஸ்கூலுக்கு ரெடி ஆகி என் டம்பளர்-ல பாதி ஊற்றி குடித்துவிட்டு ஸ்கூக்கு கிளம்பும்போது அப்பாகிட்ட, இந்த வாரம் scout camp இருக்குபா, எங்க? மூக்கனுர் மலை கேம்ப். Patrol Leaders கண்டிப்பா போகணும்ப்பா. பாக்கலாம்.

திரு எனக்கு முன்னாடியே வந்து football விளையாடிக்கொண்டு இருந்தான். மதியம் PT-period-ல எந்த கேம்மும் விளையாடல, மாறாக திருவும், ராகவனும் என்னை scout கேம்ப்-கு வரச்சொல்லி மூளை சலவை செய்து கொண்டிஇருந்தனர்.

டேய் ரொம்ப ice வைக்காதீங்க ட, சார் என்ன சொன்னாரு patrol Leaders கண்டிப்பா வரணும்.யோசிங்கடா. காம்பௌண்ட் கு அந்த பக்கம் girls-விளையாட்ற சவுண்ட் கேட்டுச்சு, boys ஸ்கூல் பக்கத்துல தான் girls ஸ்கூல் ஒரே காம்பௌண்ட் தான், சுத்தி பாத்தேன் PT சார் இல்ல, காம்பௌண்ட் மேல ஏறி, தலையை மாட்டும் அந்த பக்கம் நீட்டி பார்த்தேன்,

Zarina அவ ப்ரண்ட்ஸ் கூட ko-ko விளையாடிட்டு இருந்தா. Zarina எங்க அப்பாகிட்ட தான் டியூஷன் வரா. டைலர் பொண்ணு.

ஹாய் Zarina ko-ko வா?. பாத்தா எப்படி தெரியுது? ko-ko தான். இங்க என்ன டா பண்ற, PT period, பசங்க கூட பேசிட்டு இருந்தான். உன் வாய்ஸ் கேட்டுச்சு அதான் எட்டிபாத்தேன்.

ஈவினிங் உங்க அப்பா கிட்ட சொல்றான் girls ஸ்கூல்-அ எட்டி பாக்குறான்னு. சொல்லு நானும் உங்க அப்பாகிட்ட சொல்றான். எனக்கு ஹை சொல்லி என் கூட பேசினன்னு.
கீழ இறங்குடா விழப்போற, இல்லனா PT சார் கூப்பிடுவேன். ராகவன், டேய் PT பாக்குறான் டா. பை ஈவினிங் டியூஷன்-ல பாக்கலாம்-னு சொல்லிட்டு கீழே இறங்கினேன்.

PT சார், வாத்தியார் மகனே, என்ன காம்பௌண்ட் எட்டிப்பார்க்குற, சார் Ball அந்தப்பக்கம் விழுந்துடுச்சு சார். சரி இல்லடா.

வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு, டியூஷன்-ல கண் Zarina-வை தேடியது , அப்பா கிட்ட சொல்லிடுவாளோ-னு ஒரு பயம். அவ சொல்லல. டியூஷன்-ல நான் கடைசி லைன்ல தான் இருப்பன். அவ first-லைன்ல இருப்ப. ஒரு பேப்பர்-ல தங்க்ஸ்னு எழுதி முன்னாடி பாஸ் பன்னினேன் வாங்கி படிச்சுப்பாத்துட்டு, பின்னாடி திரும்பி சிரிச்சா.

வழக்கமான காவல், விடுகதை, கதை, Tea-மட்டும் இன்றைக்கு இல்ல, அப்பா கிட்ட கேம்ப்-கு பெர்மிஸ்ஸின் கேக்கணும்னு அடக்கி வாசிச்சேன். எதிர்பார்த்தது மாதிரி அப்பா கேம்ப்க்கு போகச்சொல்லிவிட்டர். 5 ரூபா கேட்டுஇருந்தான் எவ்வளவு கொடுப்பாருனு நாளைக்கு தான் தெரியும்.

வெள்ளிக்கிழமை, scout uniform போட்டுகொண்டு, Lashing Rope எடுத்துக்கொண்டு, ஸ்கூல் கிளம்பி விளையாட்டு ஏதும் இல்லை, ராகவன், திரு,நான் மூன்றுபேரும் பிளானிங் போட ஆரம்பிச்சுட்டோம். Camp போற Scout பாய்ஸ் மாட்டும் half day-தான் ஸ்கூல். half day கேம்ப் precautions and rescue ட்ரைனிங். ட்ரைனிங் ல, knots ,symbol தான் முக்கியம். square knot,reef knot,clove hitch,sheet bend கத்துகிட்டா போதும். symbols-ல நெறய இருக்கு. drinking water, not for drinking, way identification for missing people, eatable fruits, etc.. ட்ரைனிங் முடிய மாலை 5.30 ஆகிவிட்டது.

அம்மா,நேத்து காவலுக்கு போகல, வீட்டுல இருந்தாங்க, 5.00 மணிக்கு எழுந்து, தைலமர இலைகளை சேர்த்து குளிப்பதற்கு சுடுதண்ணீர் போட்டு இருந்தார். குளிச்சு முடிச்சு scout uniform, Patrol Leader batch-யை மாட்டிக்கொண்டு, அதுக்குள்ள அம்மா Tea போட்டு வைத்திருந்தார், கிளம்பும் அவசரத்தில் அதை குடித்து வாயை சுட்டுக்கொண்டதற்கு அம்மாவை முறைத்தேன்.

சரி விடு ட , அவசரத்துல சுட்டுக்கிட்ட அதுக்கு ஏன் என்ன முறைக்குற. தனியா எங்கயும் போகாத , வெளி ஆளுங்ககிட்ட பேசாத, பசங்ககூட நடுவுல இரு, அப்பத்தான் தொலஞ்சி போகமாட்ட, “சக்கு” பையன் கூட சேர்ந்து ஓடாத அவன் கொஞ்சம் துடுக்கு. “திரு” தான் சக்கு அக்கா பையன். ஆனா அம்மாவுக்கு தெரியாது நான் தான் Patrol Leader-னு. நான் தான் trekking போற பாதையில முன்னாடி போய் symbols போடணும்னு தெரிஞ்ச அனுப்ப மாட்டாங்க.

சரி அம்மா எல்லாம் நான் பாத்துக்குறேன். போயிட்டு வரன் அம்மா, பத்ரமடா என்று சொல்லி, அவர் முந்தானை நுனியில் முடிச்சு போட்டிருந்த 5 ருபாய் கொடுத்து நான் நடந்து சென்று தெருமுனையில் மறைவதை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். trekking இனிதே துவங்கியது.

-இளையாள் கார்த்திகேயன்

✍️ கனவுகளின் ஓட்டங்கள் நிறுத்தப்பட்டு. நிஜ வாழ்க்கை தொடர்கிறது….✍️

Leave a comment