அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கொலம்பஸ் நகரத்தில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தோம் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த டீப்பாய்யில் சில புத்தகங்கள் இருந்தன. அருகில் இருந்த மேஜையிலும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. வரவேற்பு அறையில் டிவி வைப்பதற்காக செய்யப்பட்டிருந்த அலமாரியில் டிவி பதிலாக புத்தகங்கள் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. வீட்டின் உள் அறையிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்ததை கவனித்தேன். புத்தகங்களை ஓரிடத்தில் அடுக்காமல் ஏன் இப்படி இங்க அங்க-னு வைத்திருக்கின்றார் என்ற கேள்வி என்னுள் ஒலித்துக் கொண்டிருக்க, அவரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் என்னை சிந்திக்கவைத்து, செயல்படுத்தவேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.
அவர் கொடுத்த விளக்கம்..
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளை, பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களைப் படிக்க வைப்பது மிகவும் சிரமம், சவாலானதும் கூட. டிவி, லேப்டாப், மொபைல், வீடியோ கேம்ஸ் இவைகளின் பிடியில் இருந்து பிள்ளைகளை மீட்டெடுக்க நானும் என் மனைவியும் எடுத்த ஒரு சிறிய முயற்சி இது என்றார். அவர்கள் பார்வை செல்லும் இடங்களில் எல்லாம் புத்தகங்களை வைத்துள்ளோம். பிள்ளைகளும் எப்போதாவது எடுத்து படிக்கிறார்கள். இதற்காகவே வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த டிவி-யை மாடிக்கு இடம் மாற்றிவிட்டோம். டிவி கண்ணில்படாத வரை அதன் மீதான ஈர்ப்பு குறைய வாய்ப்பு இருக்கின்றது என்று நம்புகிறோம். அவர்களின் உடல் நலம் மற்றும் மன நலம் கருதி நானும் என்மனைவியும் டிவி பார்ப்பதை 90% தவிர்த்துவிட்டோம். ஒரு வகையில் இது மனதிற்கும் உடலுக்கும் நல்லது. நம் காலத்தில் தூர்தர்சன்-ல் தினமும் இரவு 8-மணி செய்திகள், வெள்ளிகிழமை ஒளியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4-மணிக்கு ஒரு படம் இதற்கு மட்டுமே டிவி பயன்படுத்தும் பழக்கம் நன்றாக இருந்தது என்றார்.
வீட்டில் அலமாரியில் வெறுமனே புத்தகங்களை அடுக்கி வைப்பதைவிட, வீட்டில் அங்க இங்க, அறைகளில் வைக்கும்போது எப்படியாவது புத்தகத்தை புரட்டிப்பார்ப்பார்கள். அதன் விளைவாக மற்ற புத்தகங்களை படிக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்று சொல்லி முடித்தார். அவர் கூறிய விதம் என்னை சிந்திக்கவைத்தது. அவரது மனைவி கொடுத்த காபி-யை குடித்துகொண்டே, அவர் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்.
பிள்ளைகளை அடிக்காமலும், அதட்டாமலும், அவர்களின் கைகளை கட்டிபோடாமலும் அவர்களின் கண்ணில் படுமாறு நல்ல காட்சிகளை புகுத்தி அதற்கு அவர்களை பழக்கப்படுத்தும் நண்பரின் முயற்சி வரவேற்கத்தக்கது.
-இளையாள் கார்த்திகேயன்
✍️ மாற்றத்தை முயற்சிப்போம்…. ✍️
