சக்கர..

யம்மா!.. அதோ.. சந்தோஷத்தில் ஓடி வருகிறதே ஒரு “கருப்பு” உருவம் அவன்தான் ரத்னாவின் ஏக புத்திரனான “சக்கர” சிறுவன். தர்மபுரி ஜில்லா வாசிகளை தவிர மற்றவர்களுக்கு பெயர் வேடிக்கையாகத்தான் இருக்கும். ரத்னாவின் இறந்துபோன அப்பனின் பெயர் அது. கிழவன் மீது கொண்ட பாசத்தினால் அந்த பெயரை அவள் மகனுக்கு வைத்தாள்.

இப்பொழுது சக்கரைக்கு ஏக குஷி! ஏன் தெரியுமா? அடுத்த வீட்டு அடுப்பிலிருந்து சோற்றை திருடி தின்ற குஷிதான்.

பூட்டா, சாவியா? – பிளாட்பார வாழ்க்கை தானே? நாய் வந்து வாய் வைத்தாலும் அடித்து துரத்துவார் இல்லை. பானையோடு தூக்கிக்கொண்டு தெருக்கோடியிலிருக்கும் அந்த பாழடைந்த மண்டபத்துக்குத்தான் ஓடியிருப்பான். அது அவன் வாஸ்தலம்.

உன்ன வெட்டி வெக்க.. எங்கட போயிருந்த சோமாறி?. என்று வரவேற்றாள் அவன் தாய் ரத்னா.

“யம்மோவ்.. துட்டும்மா, ஹும் .. துட்டு குடும்மா….” என்று அவள் சேலை முந்தானையைப் பிடித்துக்கொண்டு குதித்தான் சிறுவன். ரத்னா நிறைமாசக் கர்ப்பிணி அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவள் ஈடு கொடுக்கமுடியுமா. அவன் இழுத்த இழுப்பிலே கீழ விழுந்தாள். சமாளித்துக்கொண்டு எழுந்து நின்ற வேகத்தில் சக்கரையின் முதுகில் இரண்டு அறை வைத்தாள். உன்ன பாடையிலே வெக்க.. என்ன இழுத்து தள்ளபாத்தயே, எங்கனாச்சும் ஒழிஞ்சி தொலையறதுதானே?.. துட்டு வேணுமாம் துட்டு. இவன் அப்பன் இங்கே கொட்டி வச்சுஇருக்கான் பாரு..

யாம்மா எங்காப்பான் ஆரும்மா?

ரத்னா என்ன பதில் சொல்லுவாள்? அவளுக்கே தெரியாது இப்பொழுது வயிற்றிலிருப்பதற்கு தகப்பன்..?

ஒரு நிமிஷம் எங்கோ நெனச்சு பாத்து கோவில் திருவிழாவில் சந்தித்து சில நாட்கள் பழகிய அந்த பொம்மை வியாபாரியை, அவன் முகத்தை, அவன் சிரிப்பை, அவனது சேஷ்டை மனசில் நினைத்து பார்த்து சிரித்தாள். அவாள் முகத்தில் சிரிப்பு ததும்பியது. அந்த ரகஸ்யங்கள் எல்லாம் சக்கரைக்கு தெரியுமா?.

இங்கவாடா வாந்தி பேதில போறவனே, என்று கடித்துக்கொண்டு அவனை அடிக்க கையை வீசினாள். ஒரே வீச்சில் அவளிடம் இருந்து விலகி நின்ற சிறுவன் இப்போ என்ன பண்ணுவ என்று அவளை மேலும் கோவப்படுத்தினான். “வா வா சோறு கொட்டிக்க வருவே இல்லே ” என்று விரலை ஆட்டி அவனை கடித்துக்கொண்டாள் ரத்னா. நான் தான் தின்னுட்டனே என்று மேல்சட்டை இல்லாத உடம்பில் இருக்கும் வயிறை தடவி ஒரு ஏப்பம் விட்டான்.

சக்கரையின் முதுகில் பின்னிருந்து ஒரு அடிவிழுந்தது.

அந்த கெட்ட வார்த்தையை கொண்டு திட்டிவிட்டு, வேலைசெய்ய போயிருக்கிறவங்களுக்கு சோறு எடுத்துவச்ச அத திருடி தின்னுட்டு வந்து ஆட்டம் போடறத பாரு என்று உறுமியவாறு வந்து நின்றான் மரிக்கொழுந்து.

வாடி என் பத்தினி, “பத்தினி படாபடா னாளாம், பான சட்டி லொட லொடனுசாம்” என்ற இரட்டை அர்த்த பழமொழியை இழுத்து சொல்லி தலைமுடியை முடிந்து முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு வந்தாள் ரத்னா.

ஐய வாடி இவளே ரோசத்துக்கு ஒன்னும் கொர இல்ல. அப்படியே தாலிகாட்டிகிணு தொங்க தொங்க பெத்தவ என்று தாடையை தோள்பட்டையில் இடித்துகொண்டாள்.

ஆமாடி.. உன்ன மாதிரி தொங்க தொங்க கட்டிக்கினு ஊர் மேய்யறதுனா நல்லாத்தாண்டி இருக்கும் என்று திருப்பி கொடுத்தாள் ரத்னா.

ஆமா.. நான் போம்போது நீ தான் வந்து விளக்கு புடிச்ச!.. என்றல் மரிக்கொழுந்து. மரிக்கொளுந்துக்கு தன்னை பற்றி யாருக்கும் தெரியாது-னு தைரியம்.

ஏண்டி, ஒரே மூச்சா சிலுப்பிகிற… உன் விலாசம் பூரா என்னாண்ட இருக்குடி.. அன்னக்கி, சொதந்திரத் தினத்துக்கு முன்னாடி ஒருத்தன்கூட போனியே எனக்கு தெரியாதுன்னு நெனக்கிறையாடி..

மரிக்கொளுந்துக்கு சுருக்குனு கோவம் வர, பதிலடி எதுவும் கொடுக்காமல் (பேசாமல்) இன்னாடி சொன்ன “முண்ட” என்று கத்திக்கொண்டு எட்டி கன்னத்தை அறைந்தாள். அடியே என்சக்காளத்தி என்று மரிகொளுந்தின் முடியை பிடித்தாள் ரத்னா. வலி பொறுக்கமுடியாமல் ரத்னாவின் நெஞ்சில் குத்தினால் மரிக்கொழுந்து. பிடித்த முடியை விடாமல் இருந்தாள் ரத்னா. அடுத்த குத்தும் நெஞ்சில் பட்டது. மூன்றாவது குத்து ரத்னாவின் வயிற்றில் விழுந்தது.

அடியே.. புள்ளத்தாச்சிடி.. என்று கத்திக்கொண்டு மரிகொளுந்தின் முதுகில் அறைந்து பிடித்து இழுத்தான். அப்பொழுதான் அங்கு வந்தான் மரிகொளுந்தின் புருஷன் காளிங்கன்.

விலகி நின்றாள் ரத்னா. மரிகொளுந்தின் கலைந்து முடி முகத்தில் இருந்தது. இருவருக்கும் காஸ், காஸ் என்று மூச்சு வாங்கியது. ரத்னாவின் ரவிக்கை கிழிந்திருந்தது. தனது பெரிய வயிற்றை மறைக்க முடியமால் பெருமூச்சுவிட்டாள்.

இன்னாம.., நீ என்னா பொம்பளையா இல்ல என்னமா. வாயும் வயுறுமா இருக்குபோது இப்படி பிசாசா அடிச்சிகிரியே. படதா எடத்துல பட்ட என்னமா ஆகும்.

நான் ஒன்னும் பண்ணல அன்னே… என அழு ஆரம்பித்தாள் ரத்னா.

புள்ளத்தாச்சியான ரத்னாவின் முகம் சிவந்து அழுவும் காளிங்கனுக்கு மனசு என்னவோபோல் ஆகிவிட்டது. போம்மா, ப்ருஸ்ட்லீ-னு நெனப்பு பறந்து பறந்து சண்ட போட்டுனுகிற… என்று பொண்டாட்டியை தள்ளிகொண்டு போனான் காளிங்கன்.

நீயும் என்ன அடிக்கிறியா. அடி..அடி.. அந்த (கெட்டவார்த்த) பெத்தது உன்னக்கு வச்சியிருந்த சோத்தை தின்னுட்டுப் போய்டுச்சு. அத கேக்க வக்கு இல்ல என்ன அடி. நான் ஏன் பொண்ண போன்றதேனோ என இழுத்து நீட்டி ஒப்பாரி வைத்தாள் மரிக்கொழுந்து.

இப்படி திருடி தின்னுட்டு வம்ப வாங்கினுவர வா வா இருக்கிற நாலு எழும்ப ஒடச்சு கஷ்டப்பட்டு மொண்டி காஞ்சு ஊத்துறேன். இல்லனா கழுத்த திருவி காய்கறி மார்க்கெட் குப்பைல போட்டுறேன் என்று முனங்கிக்கொண்டாள் ரத்னா.

ரத்னாவின் அடிவயிற்றில் சுருக்கென வலித்தது. வயிற்றை தாங்கி பிடித்துக்கொண்டு அவளுடைய கூடாரத்திற்குள் நுழைந்து படுத்துகொண்டாள்.

காளிங்கன் நாஸ்டா பண்ண கிளம்பிவிட்டான். இந்த கலவரத்தில் சக்கரை எங்கே சென்றான் என்று யாரும் கவனிக்கவில்லை. ரதனாவிற்கோ, மரிக்கொழுந்திற்கோ விபச்சாரம் என்பது தொழில் இல்லை. அவர்களை வாழும் பிளாட்பாரத்தின் எதிரே உள்ள யஷ்வந்த்பூர் காய்கறி மார்கெட்டிற்கு வரும் காய்கறி லாரியிலிருந்து காய்கறிகளை இறக்கி குடோனில் அடுக்கும் வேலை. இந்த வேலை இல்லாத சமையத்தில் வேறு ஏதாவது கூலி வேலை, அதுவும் இல்லாதபோது, மிகவும் வறட்சி இருந்து நல்ல கிராக்கி இருந்தால் வேறு எதாவது….

சாக்கு, கிழிந்த பாய், மூன்று மூங்கில், சினிமா போஸ்டர் ஒரு கூடாரம் போடுவது மிகவும் சுலபம். அந்தமாதிரி ஒரு கூடாரத்தில் தான் ரத்னா நீட்டி படுத்திருந்தாள். தலைக்குமேல் சிறிது இடம். பக்கவாட்டில் மூன்று நான்கு பாத்திரங்கள். மீண்டும் அடிவயிற்றை குத்தி இழுத்து வலித்தது. ரத்னா நெளிந்துகொண்டாள். உதடு பற்களுக்கு இடையே கடிக்கப்பட்டு நெற்றியில் சுருக்கங்கள் தென்பட்டன.

கால்களை தேவைக்கேற்ப அகற்றிக்கொண்டு இடுப்பு துணியை சற்று கீழே தளர்த்திக்கொண்டு நெஞ்சை தூக்கி உடம்பை முறுக்கிக்கொண்டாள். கால்களை தரையில் உரசிகொண்டது ரத்தானவை வலியில் இருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. மீண்டும் ஒருமுறை தரையை உரசிப்பார்த்துக்கொண்டாள்.

வலி சற்று நினைவில் இல்லை. ரத்னாவிற்கு கொஞ்சம் சாப்பிட்டால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது. கொஞ்சமாக இல்லை நிறைய. சாப்பாட்டை பார்த்தே இரண்டு நாள் ஆச்சு. அவள் கண்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு பானை மீது பட்டது. அந்த அரிசி பானை காலியாகி பக்கவாட்டில் உருண்டுகிடந்தது. பசி வயிற்றை பிசைந்தது. எரிச்சலாகிய ரத்னா ஒருகாலில் உள்ள காப்பு தரையில் படுமாறு தர தர வென உரசி பாதங்களையும் உரசிக்கொண்டாள்.

அடிவயிற்றில் பக்கவாட்டில் அடிக்கடி சுருக்கு-என்று வலி வந்தது. அம்மா… என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

ரத்னா.. ரத்னா.. என்று குரல் கேட்க மல்லாந்து படுத்தபடியே தலையை உயர்த்திப் பார்த்தாள் ரத்னா. மரிக்கொழுந்து குனிந்து கூடாரத்திற்குள் வந்து என்ன ரத்னா இடுப்புவலி வந்துடுச்சா?. என்று கேட்டாள்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல மரிக்கொழுந்து, நேத்து காலைலே ஒரு வா கஞ்சிகுடிச்சான் அவ்வளவுதான் இப்போ வரிக்கும் ஒன்னும் இல்ல பட்டினி தான். இந்த சக்கர வேற எங்க பொய் தொலஞ்சான்னு தெரியல. பசி வயித்த கிள்ளுது. அதான்.

மரிக்கொழுந்துவிற்கு மனசை என்னமோ பண்ணியது.

ரத்னாவின் பக்கத்தில் உக்காந்து வாயும் வவுருமா இருக்க எதன தின்னம இருக்கலாமா என்று பேசிக்கொண்டே அவளின் இடுப்பை பரிசோதித்து பார்த்தாள். உள்ளே இருக்கும் சிசு வெளியே வர முட்டிநிற்கும் அவள் அடிவயிற்றை தடவி பார்த்தாள் ஒரு புதிய ஜீவன் பச்சை சிசு உள்ள அடிவயிறு இறங்கி இருந்தது. உடனே ரத்னா.. இது பிரசவ வலிதான் வா ஆஸ்பித்திரிக்கு போயிடலாம் என்றாள் மரிக்கொழுந்து.

அட நீ ஒன்னு, எனக்கு தெரியாத மாசம் எட்டு தான் ஆகுது. திருவிழா அப்போதான் தரிச்சது ஆவணி..புரட்டாசி.. பாரு எட்டு தான் ஆகுது. அது எல்லாம் இல்ல ஒரு வா காஞ்சி குடிச்ச சரியாகிடும் இது பசிதான் என்றாள் ரத்னா.

இருந்த சோத்த சக்கர திருடி தின்னுட்டான். அரிசி இருக்கு காஞ்சி காச்சிடலாம் லாரி நெறைய காய்கறி வந்து நிக்குதே இப்போ விட்ட இன்னும் ஒரு வாரத்துக்கு காச கண்ணுல பாக்கமுடியாது “உம்” என்று முணுமுணுத்துக் கொணடாள் மரிக்கொழுந்து.

அரிசி இருக்கா.? என்று தலையை நிமிர்த்தி எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள் ரத்னா.

இருக்கு!.. உன்னால காஞ்சி காய்ச்ச முடியுமா..?

ஓ.. அதெல்லாம் முடியும். கொஞ்சம் சீக்கிரம் அரிசியை கொண்டா பசி உயிர் போகுது. என்று சொல்லிக்கொண்டே கலைந்திருந்த கூந்தலை சுருட்டி முடித்துக்கொண்டாள். கணுக்காலில் ஏறி இருந்த காப்பு சரிசெய்துகொண்டாள். பாதி அவிழ்த்திருந்த ரவிக்கையும் இடுப்பு சேலையும் கூடாரத்தில் நின்று சரிசெய்ய முடியாது. ரத்னா நல்ல உயரம் என்பதால் உட்கார்ந்தவரே சரிசெய்துகொண்டாள். கூடாரத்தை விட்டு மெல்ல நகர்ந்து வெளியே வந்து நிமிர்ந்து நின்றாள்.

மரிக்கொழுந்த்து பானையில் இருந்த அரிசியை கொஞ்சம் எடுத்து ரத்னாவிடம் கொடுத்துவிட்டு, ஆங்காங்கே கிடந்த விறகு சுள்ளியை பொறுக்கி அடுப்பு கற்களை ஒன்றாக அடுக்கிவைத்துகிட்டு சீக்கிரம் காச்சிகுடி நான் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லிக்கொண்டு காய்கறி லாரியை நோக்கி ஓடினாள் மரிக்கொழுந்து.

கூடாரத்தினுள் உள்ள சோற்று பானையை எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்கப் போனாள் ரத்னா.

ரத்னவினால் நிற்க கூட முடியவில்லை கால்கள் வெலவெலத்து நடுங்கியது. அடிவயிற்றில் சுருக் என்று அந்த பாழாய்ப்போன வலி.. “அம்மா…” என்று பெருமூச்சு விட்டபடி உக்கார்ந்துவிட்டாள்

பாவம் வாயும் வயிறுமா இருக்க ஒரு பானை தண்ணிவிடேன் என்றாள் ஒருத்தி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண் ரத்னா-வை பார்த்தாள். ஒரு பானை வேண்டாம் பாதி நெறைஞ்ச போதும் என்றாள் ரத்னா. அவளுக்கு இருக்கும் பசிக்கு அவ்வளவு நேரமும், அவள் வலிக்கு ஒரு பானை தண்ணீரையும் சுமக்க முடியாது. பாவம் நீ ஏன் காத்திருக்கணும் என்று சொல்லி தன் பானையில் இருக்கும் தண்ணீரை ரத்னாவின் பானையில் ஊற்றினால் அவள்.

ரத்னா பானையை தூக்கி வைக்கும் போது நெற்றி சுருங்கியது. பற்களை கடித்துக்கொள்ளும் சத்தம் கேட்டது. ஒரு கால் மட்டும் வெட.. வெட.. என நடுங்கியது.

அதோ இன்னும் சில அடிகள் வைத்தால் அவளுடைய கூடாரம் இருக்கும் இடத்திற்கு போய்விடலாம். மூன்று அடி வைத்ததுமே இடுப்பில் உள்ள பானை நிற்காமல் கை வலித்தது காலில் நடுக்கம் அதிகமாகியது.

அம்மா..என்று சொல்லி பாதி வழியிலே பானையை இறக்கி வைத்துவிட்டு அண்ணாந்து பார்த்து அவள் அம்மாவை நினைத்து ஒரு பெருமூச்சுவிட்டாள். காலில் உள்ள காப்பு உரசும்படி கால்களை தரையில் லேசாக உரசிக்கொண்டாள்.

மறுபடியும் “அம்மா…” வயிற்றில் என்ன வலியா? பசியா ?.. இல்லை கண்டிப்பாக இது பசி தான் என தீர்மானித்துக்கொண்டு அதோ சுள்ளி, அடுப்பு, அரிசி எல்லாம் இருக்கிறது அடுப்பை பத்தவச்சு அரிசியை போட்டு உப்பு சேர்த்து சூட.. அந்த பாதி எலுமிச்சை ஊறுகாய்.. என்று சொல்லும்போது அவள் வாயில் நீர் ஊர்ந்தது. எழுந்தாள் ஒரே மூச்சாக பானையை இடுப்பில் எடுத்து வைத்துக்கொண்டு நடந்தாள்.

கல் அடுப்பின் மீது பானையை வைத்து சுள்ளியை பற்றவைத்தாள். ஆரம்பத்தில் புகை அதிகம் என்பதால் கண்ணில் எரிச்சல் வயிறு மண்ணில் பாடாமல் குனிந்து ஊதினாள் “பக்” என்று பத்திக்கொண்டு எரிந்தது. இன்னும் சில சுள்ளிகளை வைத்தாள். முகத்தில் உள்ள வேர்வையை முந்தானையை கொண்டு துடைக்க தோன்றவில்லை. அவளுக்கு இப்போது தேவையெல்லாம் ஒரு மடக்கு சூடான காஞ்சி குடித்துவிட்டு படுத்துக்கொள்ள வேண்டும். பானையில் காஞ்சி கொதிக்க ஆரம்பித்து மூடிவைத்திருந்த மூடியை தள்ளியது. முந்தானையை பிடித்து கொண்டு பானையின் மூடியை எடுத்தாள். வெண்ணிறக் காஞ்சியில் சோற்று பருக்கைகளை சுழன்று கொண்டு இருந்தன.

அடுப்பில் உள்ள பானையை எட்டி பார்த்து கொதித்து ஆவிபார்க்கும் கஞ்சியின் வாசனையை இழுத்து அனுபத்தித்தாள் ரத்னா. கஞ்சியின் வாசனை அடிவயிறு வரை சென்று பசியை இன்னும் தூண்டியது. காஞ்சி குடிச்சே இரண்டு நாள் ஆச்சே, இருக்கத்தான் செய்யும்.

வேகமாக உள்ளேசென்று உப்பையும், ஊறுகாயும் எடுத்துவந்து அடுப்பின் பக்கத்தில் வைத்துவிட்டு அருகில் உள்ள கஞ்சி கலயயத்தை தண்ணீரை ஊற்றி சுத்தமாக கழுவினாள். அடுப்பு எரிந்து தணிந்துவிட்டது. கூடாரத்தின் மூங்கிலில் சாய்ந்து சற்று உட்கார்ந்து கொண்டாள். உடல்பாகங்கள் எல்லாம் தளர்ந்து கழன்று விடுவதுபோல் இருந்தது. உலர்ந்த வறண்ட உதட்டினை எச்சில்க்கொண்டு உயிர்கொடுத்தாள் ரத்னா. மெல்ல நகர்ந்து அடுப்பில் உள்ள கஞ்சியை சற்று ஆறட்டும் என்று கலயத்தில் ஊற்றினாள். பறக்கும் ஆவியை ஊதும்போது நாக்கில் எச்சில் ஊறியது. பக்கத்தில் இருக்கும் ஊறுகாய்ய்ய் கொஞ்சம் தொட்டு நக்கிக் கொண்டு “த்டா” என்று சப்புக் கொண்டிஇருக்கும் சமையம், கீழ் உதட்டை கடித்து நெற்றியை சுருக்கி இடுப்பை வளைதாள். அதென்ன வலியா..? பசியா..?

இல்லை, கஞ்சிய குடிச்சி ஒரு நிம்மதியான தூக்கம் தூங்கி எழுந்த எல்லாம் சரியாகிடும் என்று நினைத்துக்கொண்டு ஊறுகாய் பொட்டலளத்தை இழுத்து அருகே வைத்திக்கொண்டு, காஞ்சி கலயத்தை வாயில் வைத்து உறிஞ்சும் சமையும்…

“யம்மா….!” என்று ஒரு குரல் அவள் அருகே ஒலித்தது தோள்பட்டையை பிடித்து அழுத்தியது.

எனக்கு… எனக்கும்மா காஞ்சி.. என்று அவளிடம் குதித்து அடம்பிடிக்க ஆரம்பித்தான் சக்கர சிறுவன். அவனை கண்டதும் காலையில் நடந்த நிகழ்வு தான் ரத்னாவிற்கு நினைவில் வந்து ஆத்திரம் பொங்கியது.

முடியாது.. என் கையால் உனக்கு சோறு போட மாட்டேன். எங்கயாவது ஒழிஞ்சு போ.. என் முன்னே வராதே என்று கத்தினாள். பசிக்குதாம்மா.. காஞ்சி குடும்மா என்று மீண்டும் அடம்பிதான் சக்கர..

நீ என்ன செஞ்சாலும் சரி ,உனக்கு ஒன்னும் தர மூடியது போ திருட்டு மூதேவி போயி திருடி தின்னு..

யம்மா…

முடியாது என்று, கலயத்தில் இருக்கும் கஞ்சியை மூடி வைத்துவிட்டு காவலுக்கு உட்கார்ந்துகொண்டாள் ரத்னா..

பசிக்குதே.. யம்மா.. என்று சொல்லிகொண்ண்டு தரையில் புரண்டு அழுது கொண்டு இருந்தான் சக்கர..

ஆத்திரமடைந்த ரத்னா.. பக்கத்தில் கிடைத்த சுள்ளியை எடுத்து சிறுவனின் முதுகில் நாலு விளாசு விளாசினாள்.. சிறுவன் கதறிக்கொண்டு ஓட்டினான்.. எங்கயாவது ஒழிஞ்சு போ என்று குச்சியை விட்டுஎறிந்தாள்.

அடிவயிற்றில் சுருக் என்றது. பற்களை கடித்துக்கொண்டாள். பசியா ? வலியா?
சனியன், தின்றப்போ சரியா வந்து நிக்குது. என்று முனங்கிக்கொண்டே உட்கார்ந்து காஞ்சி கலயத்தை அருகே இழுத்தாள்.

யம்மா.. யம்மா.. என்று சிணுங்கிக்கொண்டே சிறுவன் மீண்டும் அவளின் பின்புறம் வந்து நின்றான். அவள் அவனை திரும்பிகூட பார்க்கவில்லை.

சக்கரைக்கு கோவம் வந்தது, அம்மவையும், காஞ்சி கலயத்தையும் வெறிக்க பார்த்தான்.
யம்மா.. தரய.. மாட்டாயா என்று கோபத்துடன் கேட்டான்.

முடியாது. நீ என்ன கெஞ்சினாலும் சரி என்று, தன் மகனின் அதட்டலை எண்ணி உள்ளூர சிரித்து கொண்டு, கலயத்தில் கையை விட்டு துழாவி ஒரு கவளம் சோற்றை வாயருகே கொண்டுபோனாள்.

யம்மா.. எனக்குமா.. என்று அவள் கையில் உள்ள காஞ்சி கலயத்தை பிடுங்கினான் சக்கர. அவள் தரமறுத்தாள். சோற்று கையால் அவனை தடுத்து மறுகையால் அவனை அடித்தாள். அவன் அழுந்தவாறே பிடித்தியிருந்த கலயத்தை விட மறுத்தான்.

இருவருக்கும் நடந்த இந்த மல்லுக்கட்டில் கலயத்திலிருந்த கஞ்சியெல்லாம் கீழே கவிழ்ந்து விட்டது.

ஒரு கணம் இருவரும் திகைத்து நின்றனர்.

அவனை எட்டி அடிப்பதற்கு வெறிகொண்டு பாய்ந்தாள் ரத்னா. அவன் ஒட்டிவிட்டான்.

நீ நல்லாவே இருக்கமாட்ட.. உன்னப் பாம்பு புடிங்க.. இன்னும் சில வசை சொற்கள் கொண்டு அழுத்தவாறே சபித்தாள் ரத்னா.

அவன் அதெல்லாம் காதில் வாங்காமல் கீழே கொட்டி கிடந்த காஞ்சி சோற்றை கைநிறைய அள்ளிக் கொண்டு ஓட்டம் எடுத்துதான்.

திரும்பி வராத.. உன்ன நான் மறுபடியும் பாக்க கூடாது.. என்று பல்லை கடித்துக்கொண்டு கையில் இருந்த கலயத்தை அவன் போன திசையை நோக்கி எறிந்தாள். கலயம் தரையில் மோதி உடைந்தது. ரத்னாவும் உடைந்து அழுதாள்.

பெத்த வயிறு பத்தி எரியுது.. உசுர கையில பிடித்துக்கொண்டு காய்ச்சின காஞ்சி கீழே சிதறிக்கிடப்பதை பார்த்து அட கடவுளே என்று அலறி கூடாரத்தின் மூங்கில் மேல் சாய்ந்தாள்.

திடீரென இடுப்பின் அடிபகுதியில் அலகு குத்தி இழுத்தது போன்று வலி.

அம்மா.. என்று அலறிய ரத்னா நிலைமையை உணர்ந்து கொன்டு இது இடுப்பு வலிதான் என்று அனுமானித்து கொண்டாள்.

அவளால் நகர கூட முடியவில்லை.

மார்பில் என்னவோ அடைத்து, அழுத்துவது போன்றும், வயிற்றில் குடல்கள் எல்லாம் கழன்று விழுவது போன்றும் தோன்றியது. கையும் காலும் விறைத்து கொண்டன. கால்களை தரையில் வேகமாக தேய்த்து கொண்டாள். கைகளால் தரையை பிறாண்டினால். உதட்டை கடித்துக்கொண்டு வாயெல்லாம் ரத்தம்.

அம்மா.. ஐய்யோ.. கடவுளே.. என்றுயெல்லாம் பிரார்த்தித்தாள்.

விறைத்த கால்கள் பின்னிக்கொண்டன. கால்களை தரையில் தேய்க்கும்போது காப்பும் இழுபட்டது. ஒரு வா கஞ்சிக்கு பெத்த பிள்ளையை விரட்டி அடித்தேனே, அடே சக்கர.. என் கண்ணு.. நா செத்துப் போயிடுவேன்டா.. என்று உரக்க கத்தினாள் ரத்னா.

அந்த ஒரு அலறல் காய்கறி இறக்கி கொண்டிருந்த மரிகொளுந்தின் காதுகளுக்கு கேட்டது. தலையில் இருந்த கூடையை கீழே போட்டுவிட்டு ஓட்டமாய் ஓடிவந்தாள். அவளை தொடர்ந்து ஒரு கும்பலே வந்தது.

ரத்னா என்று சொல்லிக்கொண்டே கூடாரத்தினுள் நுழைந்தாள்.

ஆம்பள பசங்க எல்லாம் போங்க.. ஏ.. குட்டி.. நீ ஏன் நிக்கிற ..போ.. என்று சிறுவர்களை விரட்டினர் சில பெண்கள்.

ரத்னா.. ரத்னா .. என்ற குரல்கள்.. பதில் இல்லை..

ஐயோ.. ரத்னா… என்று அவள் முகத்தை பிடித்துக்கொண்டு அலறினாள் மரிக்கொழுந்து..

ரத்னாவின் கண்கள் சற்றே திறந்தன.. உதடுகள் எதையோ முன்னமுணுத்தன..

எங்.. கண்ணு.. சக்கர !.. எங்.. கண்ணு.. சக்…

படக்கென தலை கீழே சாய்ந்தது..ரத்னாவின் தலைமாட்டில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டது..

அவள் மீதும் அவள் உயிரற்ற உடலில் இருந்து பெருக்கெடுத்த ரத்தத்தின் மீதும் அந்த அகல் விளக்கின் ஒளியும்.. அங்கே சூழ்ந்திருந்த மனிதர்களின் நிழலும் ஆடிகொண்டுஇருந்தது..


திடீரெனெ.. அடி.. எம்.. ரத்னா… என்ற மரிகொளுந்தின் ஒப்பாரிக் குரல் பயங்கரமாக ஓலமிட்டது..

இரவெல்லாம் எங்கோ தூங்கிவிட்டு.. பகலெல்லாம் எங்கோ அலைந்து பின் மாலையில் தாயிடம் திரும்பிக் கொண்டிருந்தான் சக்கர.

தெருமுனையில் வரும்போதே கூடாரத்தின் பக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு ஓடிவந்தான்.. கூட்டத்தை விலக்கி தன் தாயை பார்த்தும் .. யாம்மா.. என்று அலறி விழுந்தான்.

யாம்மா..யாம்மா..யாம்மா.. இதே குரல் தான் நாள் முழுவதும் விம்மி விம்மி ஒலித்தது கேவி கேவி மூச்சு இளைத்தது. சிலையாய் அமர்ந்திருந்த அவனை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள் மரிக்கொழுந்து.

அவனை கதற விட்டுவிட்டு அவன் தாய் போய்விட்டாள்..இல்லை தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

இரவு, மரிகொளுந்தின் அடுப்பு எரிந்து அடங்கிவிட்டது. புருசனுக்கு சோறு போட்டாள்.

அவள் மனசில் என்னவோ “திக்” என்றது.

பாவம்..இனிமே எங்க போய் அம்மா பசிக்குது சோறு போடு-னு கேப்பான்.. சக்கரையை பாத்து கூட்டியா மச்சான்.. அவனை பாக்காம ஓர் வா சோறு கூட தின்ன முடியல.. என்று அழுதாள்..

சோற்று தட்டில் கையை உதறிவிட்டு காளிங்கன் எழுந்து ஓடினான்..

அதோ.. அதோ..

டேய் சக்கர.. என்று சொல்லிக்கொண்டே ஓட்டினான்.. அனால், அது வேறு யாரோ..

டேய்.. சக்கரையை பாத்தியாடா .. இல்லை..
நீ.. இல்ல..
நீ.. பாத்தியா ..
சுடுகாட்டுக்கு போறேன்னு சொன்னான்..
சுடுகாட்டுக்கா?
காளிங்கன்.. நடையும், ஓட்டமுமாக சுடுகாட்டுக்கு சென்றான்..
போகும் வழியில்.. அதோ.. திரௌபதிஅம்மன் கோவில்.. யாரது? அவனா..? சக்கர..?
ஆம்.. அவனேதான்..
ஓட்டிவந்து அவனை வாரி அணைத்துக்கொண்டான்…
வாடா போவோம்..என்று அவனை இழுத்தான் காளிங்கன்..
அம்.. மா…வ்… என்று கேவி கேவி அழுதுகொண்டே காளிங்கனை அணைத்துக்கொண்டான்..
காளிங்கனின் கனிகளில் நீர் பெருகியது..

சாப்பிடுடா என் கண்ணே..
சட்டியில் சோற்றை பிசைந்துகொண்டே கெஞ்சினாள் மரிக்கொழுந்து..
அவன் அமைதியாய் வானத்தை பார்த்துகொண்டியிருந்தான்..

பிசைந்த சோற்றை ஒரு புடி எடுத்து வாய் அருகே கொண்டு போனாள்.. அவன் அவள் முகத்தை உற்று பார்த்தான்.. அவன் கை அவள் கையிலிலிருந்த ஒரு புடி சோற்றை வாங்கி வெறிக்க பார்க்க கண்களில் நீர் சுரந்தது..

கையிலிருந்த சோற்றை, அருகே உள்ள தட்டில் வைத்து ஒரு கந்தல் துணி கொண்டு மூடினான்.

என்ன ட.. இது எடுத்து தின்னு..

ஹூம்.. அது.. அது… ரத்னா அம்மாவுக்கு..

அவனிடம் இருந்த குறும்புத்தனனும்… சுறுசுறுப்பும் .. இப்பொது இல்லை.. ஏக்கம் நிறைந்த அவன் கண்கள் வானத்தை பார்த்தன..

என்னடா அப்படி பாக்குற.. என்று அவனை பிடித்து உலுக்கினாள் மரிக்கொழுந்து..

அம்மா… மா.. மா.. அழுகையில் குரல் உடைந்தது.. மரிக்கொழுந்து அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்..

மவனே சக்கர.. என்று அவனை உச்சி முகர்ந்தாள் மரிக்கொழுந்து.

” வாழ்க்கை என்பது வியாபாரம்…
வரும் ஜனனம் என்பது வரவாகும்…
அதில் மரணம் என்பது செலவாகும்…”

என்ற பாடல் ஆகாசவாணி பண்பலையில் ஒலிக்க.. ரேடியோவை சைக்கிளில் வைத்துக்கொண்டு பெரியவர் ஒருவர் கூடாரத்தை கடந்து சென்றார்.

-இளையாள் கார்த்திகேயன்

✍️ உறவுகள் தொடர்கதை…. ✍️

Leave a Reply